ரூ.1 கோடி ஜவுளி மோசடி; 2 கைதிகள் மீது வழக்கு
சேலம்: சேலம், அம்மாபேட்டையை சேர்ந்தவர் வெங்கடாசலம், 68. இவர், 'தனம் டெக்ஸ்டைல்ஸ்' பெயரில் வியாபாரம் செய்து வந்தார். இவரிடம், 2004 - 05 முதல், சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த தெய்வசிகாமணி, 60, ரகுராமன், 52, ஆகியோர், ஜவுளியை மொத்த கொள்முதல் செய்து கடைகளுக்கு சப்ளை செய்து வந்தனர். அதில், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பாக்கி வைத்து அப்பணத்தை தராமல் போக்கு காட்டினர். ஒரு கட்டத்தில் தெய்வசிகாமணி சிங்கப்பூர் சென்று, சில ஆண்டுகள் தங்கி இருந்த நிலையில், பின் சொந்த ஊர் திரும்பினார்.ஏற்கனவே கோவையில் மொத்தமாக ஜவுளி வாங்கி மோசடி செய்த சம்பவத்தில், தேடப்பட்ட அவரையும், ரகுராமனையும், கோவை மாநகர் போலீசார் கைது செய்தனர். இதை அறிந்து, ஒரு மாதத்துக்கு முன் வெங்கடாசலம், சேலம் மாநகர் குற்றப்பிரிவில் புகார் அளித்தார். இதனால் தெய்வசிகாமணி, அவரது கூட்டாளி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருவரையும் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்கப்படும் என, போலீசார் தெரிவித்தனர்.