சேலம்: சேலம் மாநகரில் உள்ள ஒன்பது திரையரங்குகளில், குழந்தைகளுக்கான திரைப்படங்கள் நேற்று ஒளிபரப்பு செய்யப்பட்டது.தேசிய குழந்தைகள் திரைப்பட சங்கம் மற்றும் சேலம் மாவட்ட நிர்வாகம் இணைந்து, இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை, மாவட்ட தலைநகரில் குழந்தைகள் திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான, குழந்தைகள் திரைப்பட விழா, சேலம் கீதாலயா தியேட்டரில் நேற்று துவங்கியது. கலெக்டர் மகரபூஷணம் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார்.முதல் கட்டமாக, வரும் 15ம் தேதி வரையிலும், இரண்டாம் கட்டமாக, 16ம் தேதி முதல் 20ம் தேதி வரையிலும், மூன்றாம் கட்டமாக, அக்டோபர் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை என, 12 நாட்களுக்கு காலை 9 மணி முதல் 10.30 மணி வரை, முற்றிலும் இலவசமாக குழந்தைகளுக்கு திரைப்படம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.திரைப்படம் ஒளிபரப்ப, தியேட்டர் உரிமையாளர்களுக்கு செலவினத் தொகையாக, மாவட்ட நிர்வாகம் சார்பில் காட்சிக்கு, 700 ரூபாய் வீதம் வழங்கப்பட உள்ளது. பள்ளிக் குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்து வர, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. தியேட்டர்களில் உள்ள இருக்கைகளின் எண்ணிக்கை தகுந்தவாறு மாணவ மாணவியர் அழைத்து வரப்படுகின்றனர்.சுந்தரகாண்ட மகாபாரதம், தன்னம்பிக்கை, செல்லம், எங்களால் முடியும், ஆறு பேர் அற்புதம், ஆயிஷா முதலில் நீங்கள், மகேஷ்மிர்ஷா, பால்யமேதை, கயத் உள்ளிட்ட படங்கள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 124 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர், இவற்றை கண்டுகளிக்க உள்ளனர்.