சேலம்: உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் சிறப்பு பிரிவு துவக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 17, 19 ஆகிய நாட்களில் நடக்கிறது. அதை தொடர்ந்து, 21ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. சேலம் மாநகராட்சி பகுதியில், தேர்தலை அமைதியாக நடத்தும் வகையில், சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில், தேர்தல் சிறப்பு பிரிவு துவக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பிரிவுக்கு, மாநகர மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் பெரியசாமி தலைமையில், இன்ஸ்பெக்டர் உதயகுமார், எஸ்.ஐ., பால்ராஜ், கற்பகம், துரைராஜ், அழகு, சரவண பெருமாள் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். சிறப்பு பிரிவில், கம்ப்யூட்டர் வசதியுடன் நவீன உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளது.
தேர்தல் ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை, இந்த பிரிவு, 24 மணி நேரமும் செயல்படும் வகையில், சுழற்சி முறையில் போலீஸார் பணியில் ஈடுபட்டுகின்றனர். சேலம் மாநகரில் பதட்டமான வாக்குச் சாவடிகள் பட்டியலிடப்பட்டு, அங்கு சிறப்பு அதிரடிப்படையை பாதுகாப்பில் ஈடுபடுத்துவது உள்ளிட்ட அனைத்து பணிகளும் இந்த பிரிவு மூலமே மேற்கொள்ளப்படும். தேர்தல் தொடர்பான பொதுமக்களின் புகார்கள், இங்கு பதிவு செய்யப்பட்டு உடனுக்குடன் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது.