சேலம்:''ஆனந்தா பாலம் பணியை முடிப்பதற்காக, அரசிடம் ஆறு கோடி ரூபாய் நிதி
கேட்கப்பட்டுள்ளது,'' என, சாலை பாதுகாப்புக்குழு கூட்டத்தில் கலெக்டர்
மகரபூஷணம் தெரிவித்தார்.சேலம் மாநகரின் முக்கியப் பகுதியில் ஆனந்தா பாலம்
உள்ளது. தரைப்பாலமாக இருந்த அந்த பாலத்தின் வழியே, ஆயிரக்கணக்கானோர் இரு
சக்கர வாகனங்களில் செல்வர். அதனால், கடை வீதி பகுதியில் போக்குவரத்து
நெரிசல் குறைந்து காணப்படும். தற்போது, தரைப்பாலம் பகுதியில் உயர்மட்ட
பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.இரண்டு ஆண்டுகளுக்கு முன்,
துவங்கப்பட்ட பணி, இன்றுவரை முடிவடையாமல் இழுபறியாக கிடக்கிறது. இதனால்,
போக்குவரத்து நெரிசல் அதிகமாகி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆனந்தா
பாலம் பகுதியில் உள்ள கலைமகள் சபாவுக்கான நிதியை கொடுத்து விட்டால், பணிகள்
விரைந்து முடிவடையும். அது தொடர்பாக, அரசிடம் நிதி கேட்டு அறிக்கை
அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள்
பெயரளவுக்கு ஆய்வு செய்து விட்டு செல்கின்றனர்.இந்நிலையில், நேற்று, சேலம்
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சாலை பாதுகாப்புக்குழு கூட்டம் நடந்தது.
கலெக்டர் மகரபூஷணம் தலைமை வகித்தார். கூட்டத்தில், சாலை விரிவாக்கம்,
வேகத்தடை, பஸ் நிறுத்தம், சென்டர்மீடியன் உள்ளிட்டவை குறித்து
உறுப்பினர்கள் தரப்பில் பேசப்பட்டது. அடுத்த கூட்டத்துக்குள்
முடிவடைவதற்கான முயற்சி எடுக்கப்படும், என அதிகாரிகள் கூறினர்.சாலை
பாதுகாப்புக்குழு உறுப்பினர் ஆக்ஸ்ஃபோர்டு ராமநாதன், ஒவ்வொரு சாலை
பாதுகாப்பு கூட்டத்திலும் ஆனந்தா பாலம் குறித்து கேட்கப்படுகிறது. ஓரிரு
மாதங்களில் முடிவடைந்து விடும் என்ற பதிலே வருகிறது. ஆனால், இதுவரை பணிகள்
முடிந்தபாடில்லை, என குற்றம்சாட்டினார்.தொடர்ந்து பேசிய கலெக்டர்
மகரபூஷணம், ''ஆனந்தா பாலத்துக்கான நிதி, ஆறு கோடி ரூபாய் கேட்டு அரசுக்கு
அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அரசு நிதியை பொறுத்தவரை, இரண்டு மாதத்திலும்
வரலாம், இரண்டு ஆண்டுகள் கூட ஆகலாம், அதுவரை இருக்கும் நிதியை கொண்டு
பணிகளை முடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிதி வந்தவுடன்,
விரைந்து முடிக்க முயற்சி மேற்கொள்ளப்படும்,'' என்றார்.உடனடியாக நிதியை
பெற்று, பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் முயற்சிக்க
வேண்டும், என சாலை பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள் சார்பில்
வலியுறுத்தப்பட்டது.கூட்டத்தில், எஸ்.பி.,மயில்வாகனன், துணை கமிஷனர் பாஸ்கரன், சிறு, குறு
தொழிற்சாலைகள் சங்க தலைவர் மாரியப்பன் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து
கொண்டனர்.