சேலம்: போலி ஆவணம் தயாரித்து, நிலத்தை விற்ற, ஜலகண்டபுரத்தை சேர்ந்தவரை
போலீஸார் கைது செய்தனர். இதே வழக்கில், தலைமறைவாக உள்ள இருவரை, போலீஸார்
தேடி வருகின்றனர்.சேலம், ஜலகண்டபுரம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர்
மாரியப்பன். இவரது மகன்கள் கோவிந்தராஜ் (27), செல்வராஜ். மூன்று பேரும்
சேர்ந்து அயோத்தியாபட்டணம் அருகேயுள்ள காதனூர் கிராமத்தில், 53 சென்ட்
நிலம் இருப்பதாகக் கூறி, போலி ஆவணம் தயாரித்து நிலத்தை விற்றுள்ளனர்.
ஓமலூர், அம்மன்கோவில்பட்டியை சேர்ந்த ராமுவிடம், 53 சென்ட் நிலத்தை, 8.50
லட்சம் ரூபாய்க்கு விலை பேசி, அட்வான்ஸாக நான்கு லட்சம் ரூபாயை மூன்று
பேரும் பெற்றுக் கொண்டனர். சில நாட்களுக்கு முன், போலி ஆவணம் தயாரித்து
நிலத்தை விற்ற வழக்கில், மாரியப்பனை போலீஸார் கைது செய்த விஷயம் ராமுவுக்கு
தெரிந்தது. சந்தேகமடைந்த ராமு, சேலம் மாவட்ட நில அபகரிப்பு மீட்பு பிரிவு
போலீஸாரிடம் மூன்று பேர் மீதும் புகார் தெரிவித்தார். இது குறித்து,
விசாரணை நடத்திய போது, அங்கு, எட்டு சென்ட் நிலம் மட்டுமே இருப்பது
தெரிந்தது.இதையடுத்து, நில அபகரிப்பு மீட்பு பிரிவு இன்ஸ்பெக்டர்
தட்சிணாமூர்த்தி, போலி ஆவணம் தயாரித்த கோவிந்தராஜை கைது செய்தார்.
சமீபத்தில், கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வந்த மாரியப்பனும், அவரது
மற்றொரு மகன் செல்வராஜும் தலைமறைவாகி விட்டனர். இவர்களை போலீஸார் தேடி
வருகின்றனர்.