சேலம்:''தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் குடியிருப்பில் பழுதடைந்த பழைய
வீடுகள் இடிக்கப்பட்டு, புதிதாக கட்டித்தரப்படும் என்ற திட்டம்
பரிசீலனையில் உள்ளது,'' என, தமிழக காவலர் வீட்டு வசதி கழகத் தலைவர் ஷியாம்சுந்தர் சேலத்தில்
கூறினார்.சேலம் ஆயுதப்படை மைதானத்தில், போலீஸாருக்காக கட்டப்பட்டு வரும், 342 வீடுகளின் பணிகளை நேற்று, தமிழக காவலர் வீட்டு வசதி கழக தலைவரும்,
டி.ஜி.பி.,யுமான ஷியாம்சுந்தர் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.அவர்
நிருபர்களிடம் கூறியதாவது:சேலம் கோட்டத்தில் உள்ள சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல்
ஆகிய மாவட்டங்களில் போலீஸாருக்காக கட்டப்பட்டு வரும், 666 வீடுகள், நடப்பு
நிதியாண்டுக்குள் (மார்ச் 2012) கட்டி முடிக்கப்பட்டு, அவர்கள் வசம்
ஒப்படைக்கப்படும். சேலத்தில் கட்டப்பட்டு வரும் வீடுகளின் பணிகள்
துரிதப்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் சென்னையில் வீடியோ கான்பரன்ஸிங் முறையில், போலீஸாருக்குரிய 480
வீடுகளை தமிழக முதல்வர் திறந்து வைத்தார். தமிழகம் முழுவதும் 4,500 வீடுகள்
கட்டப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, அடிப்படை வசதிகள் இன்றி பாதிக்கப்பட்டுள்ள
வீடுகள் மேம்படுத்தப்படும்.சேலம் எஸ்.பி., அலுவலத்தில் உள்ள சிறு சிறு
குறைகள் விரைவில் நீக்கப்படும். தமிழகத்தில் பழைய பழுதடைந்த, 3,400 போலீஸாரின்
வீடுகள் இடிக்கப்பட்டு, புதிதாக கட்டித் தரப்படும் என்ற திட்டம்
பரிசீலனையில் உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸாருக்கும் குடியிருப்பு வசதி
ஏற்படுத்தி தர வேண்டும் என்பதே நோக்கமாக உள்ளது. தமிழகத்தில் இதுவரை, 48
சதவீத போலீஸாருக்கு குடியிருப்பு வசதி செய்து தரப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு
படிப்படியாக குடியிருப்பு வசதி செய்து தரப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.