உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கட்சி தாவியவர்கள் கவுன்சிலர் பதவிக்கு குறி!அ.தி.மு.க., முக்கிய நிர்வாகிகள் கலக்கம்

கட்சி தாவியவர்கள் கவுன்சிலர் பதவிக்கு குறி!அ.தி.மு.க., முக்கிய நிர்வாகிகள் கலக்கம்

சேலம்:தி.மு.க.,- பா.ம.க., காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான கட்சிகளில் இருந்து அ.தி.மு.க., வுக்கு தாவியவர்கள், கவுன்சிலர் பதவிக்கு குறி வைத்து, காய் நகர்த்தி வருகின்றனர். அதனால், அ.தி.மு.க., வின் முக்கிய பொறுப்பில் இருக்கும் நிர்வாகிகள், பல ஆண்டாக கட்சிக்கு உழைத்த தொண்டர்கள் ஆகியோர் கலக்கம் அடைந்துள்ளனர்.சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. வெற்றிக்கு பின், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில், தி.மு.க., பா.ம.க., காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள், அ.தி.மு.க., வில் இணைந்தனர். புதிதாக கட்சியில் சேர்ந்த பலருக்கு, முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டது.விரைவில், உள்ளாட்சி தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க.,- தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளில், விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. அ.தி.மு.க., வில் புதிதாக இணைந்தவர்கள், கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளுக்கு குறி வைத்து காய் நகர்த்தி வருகின்றனர்.சேலம் மாநகராட்சி தேர்தலில், கட்சியில் சேர்ந்து மூன்று மாதங்கள் கூட ஆகாத பலர் கவுன்சிலர் பதவிக்கான சீட் கேட்டு விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். சீட்டை பெறுவதற்கு, முக்கிய நிர்வாகிகளை 'கவனிக்கவும்' தயாராக இருக்கின்றனர். புதியவர்களின் வரவால் அ.தி.மு.க., வின் முக்கிய பொறுப்புக்களில் இருப்பவர்கள், தங்களுக்கு, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்று கலக்கம் அடைந்துள்ளனர்.இதுகுறித்து அ.தி.மு.க., பிரமுகர் ஒருவர் கூறியதாவது:அ.தி.மு.க., வின் வளர்ச்சிக்காக, கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் பாடுபட்டுள்ளனர். பல்வேறு கட்சியில் இருந்து அ.தி.மு.க., வில் புதிதாக வந்து சேருபவர்களை, கட்சி வரவேற்க தயாராக இருக்கிறது. அதற்காக அவர்களுக்கு, முன்னுரிமை வழங்குவது நியாயம் ஆகாது.சமீபத்தில், அ.தி.மு.க., வில் இணைந்த பலருக்கு, சேலம் மாவட்டத்தில் பெற்றோர், ஆசிரியர் கழக உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அதேப்போல, ஒரு சில இடங்களில் கட்சியின் முக்கிய பொறுப்புகளும் வழங்கப்பட்டுள்ளது. மாநகர், மாவட்ட நிர்வாகிகளின் நடவடிக்கையால், அ.தி.மு.க., வினர் கடும் அதிருப்தி அடைந்தனர்.உள்ளாட்சி தேர்தலிலும், அதேப்போன்ற சூழ்நிலை ஏற்பட்டால், அ.தி.மு.க., வினர் கடும் அதிருப்தியடைவர். எனவே, கட்சி தலைமை, விருப்ப மனுக்களை, நன்கு பரிசீலித்து, உரியவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !