உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலம் மாவட்டத்தில் 23 லட்சம் வாக்காளர்கள்

சேலம் மாவட்டத்தில் 23 லட்சம் வாக்காளர்கள்

சேலம்: சேலம் மாவட்டத்தில் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான, புகைப்படம் அல்லாத வாக்காளர் இறுதிப்பட்டியலை நேற்று கலெக்டர் மகரபூஷணம் வெளியிட்டார். மொத்தம், 23 லட்சத்து, 12 ஆயிரத்து, 843 வாக்காளர்கள் உள்ளனர். வேட்புமனு தாக்கல் கடைசி நாள் வரை பட்டியலில் பெயர் சேர்க்க வாக்காளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் வரும், அக்.,24ல் நிறைவடைகிறது. அதற்கு முன், தேர்தலை நடத்திட, மாநில தேர்தல் ஆணையம் அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, உள்ளாட்சி தேர்தலுக்கு, ஃபோட்டோ உடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட நேற்று திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், தொழில் நுட்ப கோளாறு காரணமாக, வாக்காளர்களின் ஃபோட்டோ உள்ளடக்கிய பட்டியல் வெளியிட தாமதம் ஏற்பட்டதால், புகைப்படம் அல்லாத வாக்காளர் பட்டியல் வெளியிட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, சேலம் மாவட்ட வாக்காளர் பட்டியலை நேற்று கலெக்டர் மகரபூஷணம் வெளியிட்டார். அதை, தேர்தல் நேர்முக உதவியாளர் முகமதுஜாபர் பெற்று கொண்டார். தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் வரையில், பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் மேற்கொள்ள வாக்காளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில், மாநகராட்சி, 3 நகராட்சி, 33 பேரூராட்சி, 3ம் நிலை நகராட்சி ஒன்று, 385 ஊராட்சிக்கு உட்பட்டு மொத்தம் 23 லட்சத்து 12 ஆயிரத்து 843 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில், ஆண் வாக்காளர்கள், 11 லட்சத்து, 74 ஆயிரத்து, 832 பேர்; பெண் வாக்காளர்கள், 11 லட்சத்து, 37 ஆயிரத்து, 928 பேர் உள்ளனர். பெண்களை விட ஆண் வாக்காளர்கள், 36 ஆயிரத்து 904 பேர் அதிகம் உள்ளனர். திருநங்கைகள், 83 பேர். கலெக்டர் அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக விரைவில் தகவல் மையம் திறக்கப்படும் என்றும், தேர்தல் தொடர்பாக 94435-78010 என்கிற ஃமொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் பெறலாம். சேலம் மாநகராட்சி வேட்பாளர் பட்டியலை கமிஷனர் லட்சுமிபிரியா நேற்று வெளியிட்டார். மாநகராட்சியில் மொத்தம், 5 லட்சத்து, 68 ஆயிரத்து, 131 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில், ஆண் வாக்காளர், 2 லட்சத்து, 84 ஆயிரத்து, 821 பேர்; பெண் வாக்காளர்கள் 2 லட்சத்து, 83 ஆயிரத்து, 271 பேர். திருநங்கைகள், 38 பேர் உள்ளனர். வார்டு வாரியாக பட்டியலில் ஆண், பெண் வாக்காளர்கள் விவரம் தனித்தனியே குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சம், 50வது வார்டில், 19 ஆயிரத்து, 417 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர், 9,831. பெண் வாக்காளர், 9,585. அதேபோல, குறைந்த பட்சமாக, 11வது வார்டில், 5,665 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண் வாக்காளர், 2,828. பெண் வாக்காளர், 2,837 பேர் உள்ளனர். மண்டல வாரியாக வாக்குசாவடிகள் விபரம்: *சூரமங்கலம் மண்டலத்தில் மொத்தம் 152 வாக்குசாவடிகள். அதில், பொது-44; ஆண்-54; பெண் 54. * அஸ்தம்பட்டி மண்டலத்தில் மொத்தம் 149 வாக்குசாவடிகள். அதில், பொது-43; ஆண்-53; பெண்-53. *அம்மாபேட்டை மண்டலத்தில் மொத்தம் 170 வாக்குசாவடிகள். அதில், பொது-76; ஆண், பெண் தலா-47 வாக்குசாவடிகள். * கொண்டலாம்பட்டி மண்டலத்தில் மொத்தம் 155 சாவடிகள். அதில், பொது-33; ஆண்-பெண் தலா-61 சாவடிகள். மொத்தமாக 626 வாக்குசாவடிகளில், பொது-196; ஆண்-215; பெண்-215. மண்டல அலுவலகம் மற்றும் உள்ளாட்சி அலுவலகமாக மாநகராட்சி, நகராட்சி, ஒன்றியம், ஊராட்சி பகுதிகளில் வாக்காளர் பார்வைக்கு பட்டியல் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை