| ADDED : பிப் 06, 2024 09:54 AM
இடைப்பாடி: இடைப்பாடி, கவுண்டம்பட்டியில் செல்லியாண்டி அம்மன் கோவில் பயன்பாட்டில் உள்ள நிலத்தில், ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட வந்த அதிகாரிகளை, மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இடைப்பாடி, கவுண்டம்பட்டி பகுதியில் உள்ளது செல்லியாண்டி அம்மன் கோவில். இதன் முன்புறம் அரசு நிலம் உள்ளது. இங்கு பொங்கல் வைப்பது, ஆடு, கோழிகள் பலியிடுவது உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம். இந்த நிலத்தில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட அரசு நிதி ஒதுக்கி உள்ளது.வழிபாட்டுக்குரிய இடத்தில் மருத்துவமனை கட்டினால், கோவிலுக்கு வழி கிடைக்காது. கோவி லின் புனித தன்மை கெட்டு விடும் என கலெக்டர், சங்ககிரி ஆர்.டி.ஓ., மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் ஆகியோருக்கு இப்பகுதி மக்கள் மனு அனுப்பி இருந்தனர். மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளாத நிலையில், நேற்று கோவில் வளாகத்தில் இருந்த மரங்களை வெட்ட வனத்துறை அதிகாரிகளும், கண்காணிக்க சித்துார் வட்டார மருத்துவ அலுவலர் சந்திரமோகன், துணை தாசில்தார் சிவராஜ் ஆகியோர் வந்தனர்.அப்போது அப்பகுதியை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட மக்கள், இந்த இடம் கோவில் பயன்பாட்டில் உள்ளது. இந்த இடத்தில் மருத்துவமனை கட்ட விட மாட்டோம். சகல வசதி, அதிநவீன சிகிச்சை மையங்களுடன் கூடிய இடைப்பாடி அரசு மருத்துவமனை அருகில்தான் உள்ளது. இங்கு மருத்துவமனை கட்ட வேண்டாம் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால் அதிகாரிகள் திரும்பி சென்றனர்.