சேலம் : சேலம் அம்மாபேட்டை போலீசார், நேற்று மதியம், 2:00 மணியளவில் குமரகிரிபேட்டை முருகன் கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு மாருதி எக்கோ வேனை நிறுத்திவிட்டு இருவர், சந்தேகப்படும் வகையில் பேசி கொண்டிருந்தனர். போலீசார் மாருதி வேனில் நடத்திய சோதனையில், அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, பான்மசால், 63 கிலோ பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு, ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய். அத்துடன், ஒரு லட்சத்து, 56 ஆயிரம ரூபாய் சிக்கியது.விசாரணையில் வேன் டிரைவரும், உரிமையாளரான சேலம் கே.ஆர்.,தோப்பூர், ரங்கநாதன் தெருவை சேர்ந்த லிங்கராஜ், 37, அவரது கூட்டாளி அம்மாபேட்டை, குமரகிரிபேட்டையை சேர்ந்த கார்த்திக், 34, என்பது தெரிந்தது. திருப்பூரில் வினியோகம் செய்ய குட்கா, பான்மசால் உள்ளிட்ட புகையிலை வஸ்துகளை எடுத்து செல்வதும், கார்த்திக் வசம் இருக்கும் ஹான்ஸ் மூட்டைகளை எடுத்து செல்ல வந்ததாக லிங்கராஜ் தெரிவித்தார்.அதையடுத்து வேனுடன் பணம், புகையிலை வஸ்துகளை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.