உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கட்சி பதவிக்காக ஜெ., பேரவை செயலாளர் வசூல் வேட்டை

கட்சி பதவிக்காக ஜெ., பேரவை செயலாளர் வசூல் வேட்டை

தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் இடைப்பாடி பழனிசாமியின், ஏஜன்ட் போல் செயல்பட்டு, கட்சி பதவிக்கு வசூல் வேட்டை நடதியதாக, சேலம் மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் இளங்கோவன் மீது கட்சி நிர்வாகிகள், பகிரங்க புகார் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டத்தில், புறநகர் கிழக்கு, மேற்கு என, இருந்தது. கடந்த மாதம், சேலம் புறநகர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களை ஒன்றாக இணைத்து அ.தி.மு.க., கட்சி தலைமை உத்தரவிட்டது. தொடர்ந்து, தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் இடைப்பாடி பழனிசாமியை, ஒருங்கிணைந்த புறநகர் மாவட்ட செயலாளராக நியமித்து கட்சி தலைமை அறிவித்தது.சேலம் கிழக்கு மாவட்ட முன்னாள் ஜெ., பேரவை செயலாளர் இளங்கோவன், அமைச்சர் இடைப்பாடி பழனிசாமியின் ஆதரவாளராக வலம் வந்ததால், தற்போது ஒருங்கிணைந்த மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதனால், சேலம் கிழக்கு பகுதியான ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு உள்ளிட்ட சட்டசபை தொகுதிகளில், புறநகரின் பல்வேறு மாவட்ட பொறுப்புகளுக்கு அவர் வசூல் வேட்டை நடத்தியதாக, 'பகிரங்க' புகார் எழுந்துள்ளது. அமைச்சரின் ஏஜன்டாகவும், நிழல் மந்திரியை போல் செயல்படும், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் இளங்கோவன் மீது கட்சி தலைமைக்கு, ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு சட்டசபை தொகுதிகளை சேர்ந்த அ.தி.மு.க., நிர்வாகிகள் பலர் புகார் மனு அனுப்பி வருகின்றனர்.இளங்கோவன் மீது கட்சி தலைமைக்கு அனுப்பிய புகார் மனு விபரம்: சேலம் புறநகர் மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் புத்திரகவுண்டன்பாளையம் இளங்கோவன், கிழக்கு மாவட்டமான ஆத்தூர், தலைவாசல், பெத்தநாயக்கன்பாளையம், கெங்கவல்லி, ஏற்காடு, பனமரத்துப்பட்டி போன்ற பகுதிகளில் உள்ள, 'டாஸ்மாக்' பார்களிலும், 'கமிஷன்' பெற்று வருகிறார். தற்போது, ஒருங்கிணைந்த மாவட்டத்தில், கட்சி பதவிகளுக்கு கட்டணம் நிர்ணயித்து வசூல் செய்துள்ளார். ஐந்து ஆண்டுக்கு முன், சொக்கலிங்கம் என்பவரிடம், 10 ஆயிரம் ரூபாய் வாங்கி திருப்பித் தரமுடியாமல் இருந்த இளங்கோவன், தற்போது பணக்காரராக உருவெடுத்துள்ளார்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சேலம் புறநகர் மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் இளங்கோவனிடம் கேட்டபோது, ''கட்சி பதவிகளுக்கு நான் பணம் வசூல் செய்ததாக, கட்சி தலைமைக்கு புகார் அனுப்பியிருந்தால், கட்சி தலைமை விசாரிக்கும்போது அதற்கான விளக்கம் அளித்துக் கொள்கிறேன். தி.மு.க.,வை சேர்ந்த எம்.பி., செல்வகணபதி, தூண்டுதல் காரணமாக எதிர்க் கட்சியினர் இதுபோன்ற பொய் புகார்களை அனுப்புகின்றனர். தற்போது, கட்சி பதவிகள் பெற்றுள்ள நிர்வாகிகள் யாராவது, என்னிடம் பணம் கொடுத்து பதவி வாங்கியதாக புகார் தெரிவித்தால், அதை ஏற்றுக்கொள்கிறேன். வளர்ச்சியை பிடிக்காமல் இதுபோன்ற பொய் புகார்களை அள்ளி வீசுகின்றனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ