| ADDED : செப் 27, 2011 12:46 AM
சேலம்: சேலம் மாநகர திருமண மண்டபங்கள் நலச்சங்கத்தின் 10ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம், டிஆர்எஸ் கல்யாண மண்டபத்தில் நடந்தது. சங்க தலைவர் கலைவாணி சுந்தரம் தலைமை வகித்தார். கூட்டத்தில், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, பணியாளர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்டவற்றால், மண்டப பராமரிப்பு செலவினங்கள் கணிசமாக உயர்ந்துள்ளது. திருமண மண்டபங்களை தொடர்ந்து நடத்துவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியது உள்ளது. பிற மாவட்டங்களில் வாங்கும் கட்டணத்தை விட, சேலம் மாநகரில் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. அதனால், மண்டபத்தின் வசதிகள், உபயோகிப்பாளர்களுக்கு ஏற்ப கட்டணத்தை உயர்த்துவது பற்றி பரிசீலிக்கப்பட்டது. பிளாஸ்டிக் பொருள் உபயோகம் தடை செய்யப்பட்டுள்ளது. அதை நல்ல முறையில் அமல்படுத்தி, மண்டபங்களை சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பொருளாளர் சீனிவாசன், உப தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் வெங்கடாசலம், உறுப்பினர்கள் சீதாராமன், வேணுகோபால், கிருஷ்ணமூர்த்தி, மகேஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.