சேலம்: கடந்த உள்ளாட்சி தேர்தலில், சுயேட்சையாக களம் இறங்கிய தே.மு.தி.க., வினர், வரும் தேர்தலில் முரசு சின்னத்தில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தங்களது கட்சி சின்னத்தில் போட்டியிடும் பட்சத்தில், கணிசமான வெற்றிகளை பெற முடியும் என்று, தே.மு.தி.க., வினர் இடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த, 2006ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க., தனித்து போட்டியிட்டது. அதில், தே.மு.தி.க., அதிக தொகுதிகளை கைப்பற்ற முடியாவிட்டாலும் கூட, 27 லட்சத்து 61 ஆயிரத்து 137 ஓட்டுக்கள் (8.32 சதவீதம்) வாங்கியது. கணிசமான ஓட்டுக்களை பெற்றாலும், தே.மு.தி.க.,வுக்கு தேர்தல் ஆணையம், அங்கீகரிக்கப்பட் கட்சி என்ற அந்தஸ்தை வழங்கவில்லை.
கடந்த, 2006ல் நடந்த உள்ளாட்சி தேர்தலிலும், தே.மு.தி.க., தனித்து களம் இறங்கியது. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்காததால், மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் தே.மு.தி.க., வினர் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கினர். பல்வேறு சின்னங்களில் போட்டியிட்டதால், உள்ளாட்சி தேர்தலில் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. ஓட்டு சதவீத அடிப்படையில், கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு, தே.மு.தி.க., வுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கி, முரசு சின்னத்தை ஒதுக்கியது. சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வுடன் கூட்டணி அமைத்த தே.மு.தி.க., முரசு சின்னத்தில் போட்டியிட்டு, 29 தொகுதிகளை கைப்பற்றியது.
அதனால், தே.மு.தி.க.,வினர் உற்சாகம் அடைந்தனர். உள்ளாட்சி தேர்தலில், தே.மு.தி.க., மீண்டும் தனித்து போட்டியிடுகிறது. தற்போது, வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளவர்கள், தே.மு.தி.க.,வின் முரசு சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பை பெற்றுள்ளனர். தற்போது, தே.மு.தி.க., வின் சின்னம் முரசு என்பது, பரவலாக வாக்காளர்கள் மத்தியில் பதிந்துள்ளது. எனவே, கடந்த உள்ளாட்சி தேர்தலை போல் இல்லாமல், முரசு சின்னத்தில் போட்டியிடுவதன் மூலம், கணிசமான ஓட்டுக்களை பெற முடியும் என்று தே.மு.தி.க.,வினர் கணக்கு போடுகின்றனர்.