| ADDED : பிப் 13, 2024 10:51 AM
ஏற்காடு: ஏற்காடு பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இப்பகுதியில் பல்வேறு உணவகங்கள், பேக்கரிகள், மளிகை கடைகள் மற்றும் வீடுகள் உள்ளன. இங்கிருந்து வெளியேறும் கழிவுநீர், பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள கழிவுநீர் கால்வாயில் ஓடுகிறது. சில மாதங்களுக்கு முன்பு, நெடுஞ்சாலை துறையினர் சாலையை சீரமைக்கும்போது, கழிவுநீர் கால்வாயை மூடி கான்கிரீட் சாலை போட்டதாக தெரிகிறது. இதனால் ஒரு கி.மீ., நீளம் உள்ள கழிவுநீர் கால்வாய் பாதியில் மூடப்பட்டதால், கழிவுநீர் நிரம்பி சாலையில் ஓடி வருகிறது. துர்நாற்றத்துடன் ஓடும் கழிவு நீரால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கழிவு நீரில் வழுக்கி விழும் சூழலும் நிலவியது. மக்கள் கோரிக்கையை ஏற்று, நேற்று ஏற்காடு ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்தி ரவிச்சந்திரன், துணைத் தலைவர் பாலு ஆகியோர் அந்த இடத்தை பார்வையிட்டனர்.பின்னர், கழிவு நீர் ஓடும் கால்வாய் மீது போடப்பட்டிருந்த கான்கிரீட் மூடிகளை அகற்றி, வாய்க்காலில் உள்ள அடைப்பை நீக்கி சரி செய்யும் பணியை தொடங்கினர். அப்போது அங்கு வந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து, கால்வாய்களை சுத்தம் செய்து சாலையில் ஓடும் கழிவுநீரை வேறு வழியில் ஓடும்படி திருப்பி விட்டனர்.