உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சில வரி செய்திகள்: சேலம் மாவட்டம்

சில வரி செய்திகள்: சேலம் மாவட்டம்

கேக்கில் பல்லி பேக்கரிக்கு 'சீல்'

கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே நாகியம்பட்டி பஸ் ஸ்டாப்பில் ராஜி என்பவர் பேக்கரி வைத்துள்ளார். அங்கு நேற்று முன்தினம் அதே ஊரை சேர்ந்த, 35 வயது பெண், 'புட்டிங் கேக்' வாங்கி சாப்பிட்டார். அப்போது கேக் நடுவே, இறந்த நிலையில் பல்லி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே மயக்கம் ஏற்பட, தம்மம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவர் புகார்படி, சேலம் உணவு பாதுகாப்பு துறையினர், பேக்கரியில் ஆய்வு செய்தனர். அப்போது தேதி குறிப்பிடாமல், காலாவதி நிலையில் இருந்த, மிக்சர், கேக் உள்ளிட்ட இனிப்பு வகைகள், 29 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து கேக் தயாரிக்கும் இடம் சுத்தமாக இல்லை உள்பட, 15 காரணங்களை சுட்டிக்காட்டி, ராஜிக்கு, 'நோட்டீஸ்' வழங்கினர். பின் பேக்கரிக்கு, போலீஸ் பாதுகாப்புடன், 'சீல்' வைத்தனர். மேலும் உணவு மாதிரியை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பியதாக, உணவு பாதுகாப்பு துறையினர் தெரிவித்தனர்.

5,000 கடைகள் நாளை அடைப்பு

சேலம்: சேலம் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் பெரியசாமி அறிக்கை:மே, 5ல்(நாளை) வணிகர் தினத்தை முன்னிட்டு, பேர‍மைப்பு சார்பில், 41வது மாநில மாநாடு மதுரையில் நடக்க உள்ளது. மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் வணிகர் விடுதலை முழக்க மாநாடக நடக்க உள்ளது. அதில் மாவட்டத்தில், 70க்கும் மேற்பட்ட சங்கங்களில் இருந்து, 10,000 வணிகர்கள் குடும்பத்துடன் பங்கேற்க உள்ளனர். இதற்கு மாவட்டம் முழுதும், 5,000க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்து அடைக்கப்படுகிறது.

கட்டட தொழிலாளி மர்மச்சாவு

ஜலகண்டாபுரம்: ஜலகண்டாபுரம், முசுரன்வளவை சேர்ந்த, கட்டட தொழிலாளி மணிகண்டன், 39. இவரது மனைவி குழந்தையம்மாள், 37. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். மணிகண்டன், நேற்று காலை, சூரப்பள்ளி அருகே சிவசக்தி நகரில் நண்பர்களுடன் மது அருந்தினார். மதியம், 3:00 மணிக்கு அங்குள்ள வேப்ப மரத்தையொட்டி, மணிகண்டன் தலையில் காயத்துடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து ஜலகண்டாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

பைக் திருடியவருக்கு 7 மாத சிறை

சேலம்: சேலம், பள்ளப்பட்டியை சேர்ந்தவர் தினேஷ்குமார். இவர், 2023 ஆக., 4ல், வீட்டின் முன் 'பல்சர்' பைக்கை நிறுத்தியிருந்தார். அதிகாலை, 2:00 மணிக்கு பார்த்தபோது பைக்கை காணவில்லை. பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து ஆந்திராவை சேர்ந்த, மனுகொண்ட அனில்குமார், 33, என்பரை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் ஜே.எம்.எண்: 2ல் நடந்தது. அதில் அவருக்கு, 7 மாத சிறை தண்டனை விதித்து மாஜிஸ்திரேட் நேற்று உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி