ஸ்பீடு போஸ்ட் சேவை: மாணவர்களுக்கு தள்ளுபடி
சேலம், மாணவர்களுக்கு, 'ஸ்பீடு போஸ்ட்' சேவையில், 10 சதவீத சிறப்பு தள்ளுபடியை அஞ்சல்துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் அறிக்கை: அஞ்சல் துறை சார்பில், மாணவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்க, ஆவணங்களை, 'ஸ்பீடு போஸ்ட்'டில் அனுப்பும்போது, சேவை கட்டணத்தில், 10 சதவீத சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களால் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் அடையாள அட்டை வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். அனுப்புனரின் பெயர், அடையாள அட்டையில் இடம் பெற்றிருக்கும் பெயருடன் பொருத்தமாக இருக்க வேண்டும். அதேபோல் அனுப்ப வேண்டிய முகவரி, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது மத்திய, மாநில அரசுப்பணியாளர் தேர்வு வாரியமாகவோ, பொதுத்துறை நிறுவனமாகவோ இருக்க வேண்டும். இந்த தள்ளுபடி, நேரடியாக தபால் அலுவலகங்களுக்கு சென்று சில்லரை முறையில் செய்யப்படும் முன்பதிவுகளுக்கு மட்டும் பொருந்தும்.தபால் கவரின் மீது, 'மாணவர் தபால்' என தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும். மாணவர்கள், அடையாள அட்டை நகலை இணைக்க வேண்டும். இதை மாணவர்கள் பயன்படுத்தி விண்ணப்பங்கள், ஆவணங்களை விரைவாக, பாதுகாப்பாகவும் அனுப்பப்படுவதை ஊக்குவிக்கவே, இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.