| ADDED : பிப் 22, 2024 07:18 AM
தாரமங்கலம் : தாரமங்கலம், பாப்பம்பாடி ஊராட்சியில் கோமாளியூர், அண்ணா நகர், மேட்டுக்காடு, பழனிக்கவுண்டனுாரில், 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அப்பகுதிக்கு ஒரு வாரமாக தண்ணீர் வரவில்லை. இதனால் அப்பகுதி பெண்கள் நேற்று, சங்ககிரி பிரதான சாலை, கோமாளியூர் பிரிவில், காலி குடங்களுடன் அமர்ந்து, மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த தாரமங்கலம் போலீசார், வருவாய்த்துறையினர் உள்ளிட்டோர், பேச்சு நடத்தினர்.அப்போது மக்கள், 'எங்கள் பகுதியில் இருந்த தண்ணீர் தொட்டி, 15 ஆண்டுக்கு முன் சேதமானது. அதனால் சங்ககிரி சாலையில் பிரதான குடிநீர் இணைப்பில் இருந்து எங்கள் பகுதிக்கு பைப் லைன் அமைத்து குடிநீர் வினியோகித்தனர். அந்த இணைப்பை, குடிநீர் வடிகால் துறையினர் துண்டித்து விட்டனர்' என்றனர்.இதையடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் கூறியதால் மக்கள் கலைந்து சென்றனர்.சின்னசாத்தப்பாடிமேச்சேரி, சாத்தப்பாடி ஊராட்சி சின்ன சாத்தப்பாடியில், சில நாட்களாக ஊராட்சி நிர்வாகம் குடிநீர் வினியோகிக்கவில்லை.இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், நேற்று காலை, 8:30 மணிக்கு, கிராமத்துக்கு செல்லும் சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டு கலெக்டரிடம் மனு கொடுக்க முடிவு செய்து கலைந்து சென்றனர்.