ரூ.5,000 லஞ்சம் வாங்கிய கண்காணிப்பாளர் கைது
சேலம்:சேலம், அம்மாபேட்டையைச் சேர்ந்தவர் ஷர்மிளி, 45. இவரது தந்தை ரிக்பாஷா, கூட்டுறவு துறையில் அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றார். இவர் இறப்பிற்கு பிறகு, ஓய்வூதியத்தை மகள் ஷர்மிளிக்கு வழங்க, சேலம் கலெக்டர் அலுவலகத்தில உள்ள, கருவூல அலுவலகத்தை அணுகினார். அதற்கு, 5,000 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என, ஓய்வூதிய பிரிவு கண்காணிப்பாளர் தனபால் கேட்டார். லஞ்சம் தர விருப்பமில்லாத ஷர்மிளி, சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். ஷர்மிளியிடம் போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து அனுப்பினர். கலெக்டர் அலுவலகம் வந்த ஷர்மிளி, கண்காணிப்பாளர் தனபாலிடம், 5,000 ரூபாயை வழங்கினார். அங்கு மறைந்திருந்த, லஞ்ச ஒழிப்பு போலீசார், தனபாலை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். ராதாபுரம்
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக இருக்கும் அஜித் சண்முகநாதன், 28, என்பவர், பணகுடியைச் சேர்ந்த சிவபாலன் என்பவரிடம், வாரிசு சான்றிதழ் வழங்க, 4000 ரூபாய் லஞ்சம் கேட்டார். லஞ்சம் தர விரும்பாத அவர், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். தாலுகா அலுவலகத்தில் லஞ்ச பணத்தை வாங்கிய அஜித் சண்முகநாதன் கையும் களவுமாக பிடிபட்டார். அவரை கைது செய்த போலீசார், உவரியில் அவர் வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர்.