வரி வருவாய் 16 சதவீதம் உயர்வு ஜி.எஸ்.டி., தின விழாவில் தகவல்
சேலம், ஜி.எஸ்.டி., அறிமுகப்படுத்தி, 8 ஆண்டு நிறைவடைந்ததை ஒட்டி, சேலம், அணைமேட்டில் உள்ள மத்திய அரசின், ஜி.எஸ்.டி., பவன் அலுவலகத்தில், ஜி.எஸ்.டி., தின விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. அதில் சேலம் ஜி.எஸ்.டி., கமிஷனர் சித்லிங்கப்பா தேலி பேசியதாவது:வரிகளை எளிமைப்படுத்தி, நாட்டு மக்களுக்கு அதிகாரமளித்தல் என்பதே, ஜி.எஸ்.டி., தினத்தின் முக்கிய நோக்கம். சேலம் ஆணையர் அலுவலகத்தில், 2017ல் ஜி.எஸ்.டி., அறிமுகம் செய்தபோது, 36,000 பேர் மட்டுமே வரி செலுத்துவோர். 2025ல், 75,000 பேர் என, 108 சதவீதம் உயர்வடைந்துள்ளது. 2024 - 25 நிதியாண்டில், 4,360 கோடி வரி வருவாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர மே, 25 வரை மேலும், 832 கோடி ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வசூலிக்கப்பட்ட வரி வருவாயை விட, 114 கோடி ரூபாய் அதிகரித்து, 16.1 சதவீதம் உயர்ந்துள்ளது. இதன்மூலம் தேசிய சராசரி, 9.4 சதவீதத்தை விட, சேலம் ஆணையரகம், 10 சதவீதம் என்ற நிலையை எட்டியுள்ளது. இதற்கு வியாபாரிகள், தொழில் நிறுவன பங்களிப்பு முக்கியமானதாகும்.இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து, அலுவலர்கள், பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதேபோல் அதிக வரி செலுத்திய நிறுவனங்கள், சிறப்பாக பணியாற்றிய ஊழியர்கள், ரத்த தானம் செய்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன. இணை கமிஷனர் ஜெய்சன் பிரவீன்குமார், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பன்னாலால், மேச்சேரி ஜே.எஸ்.டபுள்யு., நிறுவன பொது மேலாளர் இளங்கோ, ஜி.எஸ்.டி., கூடுதல் கமிஷனர் ரஷ்மி மிஸ்ரா, இணை கமிஷனர் சுதா(புலனாய்வு) உள்பட பலர் பங்கேற்றனர்.