ஆத்துார்: நகராட்சி மயானத்தில் சிவலிங்கம், நந்தி சிலையுடன் கோவில் அமைத்து, தி.மு.க., நகர செயலர் தலைமையில் யாகம் நடத்தியது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.சேலம் மாவட்டம் ஆத்துார் நகராட்சி புதுப்பேட்டையில், 7 ஏக்கரில் எரிவாயு தகனமேடை வசதியுடன் மயானம் உள்ளது. அதன் ஒரு பகுதியில், 10,000 சதுரடியில், 'நமக்கு நாமே' திட்டம், தன்னார்வ அமைப்பினர் உதவிகளுடன், பூங்கா அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அந்த இடத்தின் ஒரு பகுதியில், 15 அடி உயரத்தில் சிவலிங்கம், 7 அடி உயர நந்தி, 9 அடி உயர அரிச்சந்திரன், 4 அடி உயர நாய் வாகனம் ஆகிய சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.அச்சிலைகளுக்கு கண் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்கு அதிகாலை, 4:30 முதல், 6:00 மணி வரை, நாமக்கல்லை சேர்ந்த, 3 சிவாச்சாரியார்கள், சிறப்பு யாகம் நடத்தினர். காலை, 6:00 மணிக்கு சுவாமி சிலைகளுக்கு, 'கண்' திறந்து வைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, தி.மு.க., நகர செயலர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்து செய்திருந்தார். தி.மு.க., கவுன்சிலர்கள் பாஸ்கர், தங்கவேல், குமார், வி.சி., கவுன்சிலர் நாராயணன், நகராட்சி அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.அனுமதி உண்டா?இதுகுறித்து பாலசுப்ரமணியம் கூறுகையில், ''உடல் அடக்கம் செய்பவர்கள், இங்கு சடங்கு செய்து வழிபடுவர். நகராட்சியில் அனுமதி பெற்று தன்னார்வ அமைப்பினர் உதவியுடன், மயானத்தில் சிவனுக்கு திறந்தவெளி கோவில் அமைக்கப்பட்டு இன்று(நேற்று) யாகம் நடத்தி சிலைகளுக்கு கண்திறந்து வைக்கப்பட்டது,'' என்றார்.நகராட்சி கமிஷனர் சையது முஸ்தபா கமால் கூறுகையில், ''மயானத்தில் சிலை வைக்க எந்த அனுமதியும் பெறவில்லை,'' என்றார்.