தீபாவளி பண்டிகையையொட்டி, ஜவுளிகள் வாங்க குவியும் மக்கள் கூட்டத்தால் போக்குவரத்து நெரிசல்
சேலம்: தீபாவளி பண்டிகைக்கு ஜவுளிகள் வாங்க குவியும் கூட்டத்தால், ஓமலுார் பிரதான சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.சேலம், ஓமலுார் பிரதான சாலை நான்கு ரோடு அருகே ஏராளமான ஜவுளி கடைகள் வரிசையாக டி.வி.எஸ்., பஸ் ஸ்டாப் வரை அமைந்துள்ளது. இவற்றில் ஜவுளிகள் மட்டுமன்றி மளிகை, வீட்டு உபயோக பொருட்கள், பாத்திரங்கள், காய்கறி, பழங்கள், உணவகங்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் நிறைந்துள்ளதால், நகரின் பெரும்பாலான மக்கள் எந்த பண்டிகையாக இருந்தாலும், இப்பகுதிக்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.ஆண்டின் மிகப்பெரிய பண்டிகையான தீபாவளிக்கு இன்னும், 15 நாட்களே உள்ள நிலையில், ஆயுதபூஜை, காந்தி ஜெயந்தி என மாதத்தின் முதல் இரண்டு நாட்கள் அரசு விடுமுறை மற்றும் சனி ஞாயிறு வார விடுமுறை என்பதால், கடந்த சில நாட்களாகவே ஆயிரக்கணக்கானோர் தீபாவளி பண்டிகை துணிகளை வாங்க குவிந்து வருகின்றனர்.இதனால் நான்கு ரோட்டில் இருந்து, புது பஸ் ஸ்டாண்டு வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு. வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்படுகிறது. அரை கிலோ மீட்டர் துாரத்தை கடக்க அரை மணி நேரத்துக்கும் மேல் ஆவதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். பண்டிகை நெருங்க நெருங்க இன்னும் அதிகமானோர் வரும் போது போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு, விபத்துகள், மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடக்கும் ஆபத்து உள்ளதால், இப்பகுதியில் கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.