| ADDED : ஜன 09, 2024 10:29 AM
சேலம்: அரியானா மாநிலத்தை தலைமை இடமாக கொண்டு, நாடு முழுவதும் செயல்பட்ட பிஏசிஎல் நிறுவனம், 5.85 கோடி முதலீட்டாளர்களிடம், 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து மோசடி நடந்தது.இது தொடர்பான வழக்கில், ஓய்வு நீதிபதி லோதா தலைமையிலான கமிட்டி, ஆறு மாதத்தில் நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு, எட்டு ஆண்டாகியும் தீர்வு காணப்படவில்லை. அதனால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள், களப்பணியாளர்கள் ஒருசேர திரண்டு, சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று காலை, 11:30 மணியளவில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.முதலீட்டாளர் செந்தில்வேல் தலைமை வகித்தார். பாதிக்கப்பட்டோர் சங்க திருப்பூர் மாவட்ட செயலரும், ஒருங்கிணைப்பாளருமான ரவிச்சந்திரன் பேசியதாவது:இந்தியாவில் அதிகபட்சமாக, தமிழகத்தில் தான் ஒரு கோடி முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்துள்ளது. மோசடி நிறுவனத்துக்கு, 193 மாவட்டங்களில், 7 லட்சம் கோடி ரூபாய்க்கு சொத்து உள்ளது. அதில், 3.85 லட்சம் ஏக்கர் நிலமாக உள்ளது. எனவே இந்த சொத்துக்களை விற்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய முதலீட்டை வழங்க லோதா கமிட்டி முன் வரவேண்டும். இல்லாதபட்சத்தில், மோசடி நிறுவனம் கோரியபடி, அவர்களாகவே சொத்துக்களை விற்று, பணத்தை ஒப்படைக்க முன் வந்துள்ளதால், அதற்கான வழிவகைகளை லோதா கமிட்டி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.இவ்வாறு பேசினார்.அதன்பின், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.