உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலத்தில் இன்று பட்டம் நடத்தும் வினாடி வினா இறுதிப்போட்டி: வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசுகள்

சேலத்தில் இன்று பட்டம் நடத்தும் வினாடி வினா இறுதிப்போட்டி: வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசுகள்

சேலம்: 'காலைக்கதிர்' நாளிதழின் மாணவர் பதிப்பான, 'பட்டம்' நடத்தும் வினாடி வினா போட்டிக்குரிய இறுதிப்போட்டி, சேலம் ஜெய்ராம் பப்ளிக் பள்ளியில் இன்று நடக்கிறது. இதில் வெற்றி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, 5 லட்சம் ரூபாய் மதிப்பில் பரிசுகள் வழங்கப்படுகின்றன.பள்ளி மாணவர்கள் இடையே பாடப்புத்தகங்களை தாண்டி பொது அறிவு, அறிவியல் அறிவு, விஞ்ஞானம், கண்டுபிடிப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அள்ளித்தர, 'காலைக்கதிர்' நாளிதழ் சார்பில், 'பட்டம்' மாணவர் பதிவு வெளியாகிறது. மாணவர்கள் இடையே வாசிப்பு திறனை ஊக்கப்படுத்தும்படி, ஆண்டுதோறும் வினாடி வினா போட்டியையும் நடத்துகிறது.நடப்பாண்டு, 'பட்டம்' இதழ், ஜெய்ராம் பப்ளிக் பள்ளி இணைந்து நடத்தும் மெகா வினாடி வினா போட்டி, 'வி3' (வினாடி வினா விருது) பெயரில் கடந்த மாதம் துவங்கியது. சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில், 178 பள்ளிகளில் இருந்து, 50,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். முதல் கட்டமாக பள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு இறுதி சுற்று வினாடி வினா போட்டி, சேலம், சின்னதிருப்பதி, ஜெய்ராம் பப்ளிக் பள்ளியில் இன்று நடக்கிறது. காலை அரையிறுதி சுற்றாக எழுத்துத்தேர்வு நடக்கிறது. அதில் சிறப்பாக தேர்ச்சி பெறும், 8 பள்ளிகளின் அணிகள், இறுதிச்சுற்றுக்கு தேர்வு செய்யப்படுவர். இந்த, 8 அணிகள் மூலம், இறுதி சுற்று வினாடி வினா போட்டி மேடையில் நடத்தப்படுகிறது. அதில் முதலிடம் பெறும் இரு மாணவர்களுக்கு, 'இஸ்ரோ' பயணம் செல்லும் வாய்ப்புடன், தலா ஒரு லேப் டாப், விருது வழங்கப்படுகின்றன. இரண்டாம் பரிசு பெறும் மாணவர்களுக்கு, 2 லேப்டாப் மற்றும் விருதுகள், மூன்றாம் பரிசு பெறும் மாணவர்களுக்கு, 2 டேப்லெட் மற்றும் விருதுகள் வழங்கப்படுகின்றன. அடுத்த, 5 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு, 'ஸ்மார்ட் வாட்ச்' மற்றும் விருதுகள் வழங்கப்படுகின்றன.பின்னர் நடக்கும் பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினரான, சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் வினோத் மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்குகிறார். மேலும் இப்போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.போட்டி நடக்கும் ஜெய்ராம் பப்ளிக் பள்ளிக்கு பல்வேறு ஊர்களில் இருந்து வரும் மாணவ, மாணவியர், ஆசிரியர்களின் வசதிக்கு சேலம், புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து, பஸ் வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியை, கோ ஸ்பான்சராக ஸ்கூல் ஆப் அலைடு ஹெல்த் சயின்சஸ், திரு நியூரோ மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை; 'பவர்டு பை' ஜெய்வின்ஸ் அகாடமி, முகுந்தா இன்டர்நேஷனல் ஸ்கூல்ஸ் வழங்குகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி