தமிழகத்தில் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கணும்: இ.பி.எஸ்.,
விக்கிரவாண்டி, ''மாநில அரசுக்கான வருவாய் ஒரு குடும்பத்திற்கே செல்வதால், தமிழக அரசு நிதி நெருக்கடியில் தவிக்கிறது,'' என்று அ.தி.மு.க., பொது செயலர் இ.பி.எஸ்., விமர்சித்தார்.விக்கிரவாண்டியில் நேற்று இரவு நடந்த மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது: தி.மு.க., ஆட்சிக்கு வந்து 50 மாதங்களில் என்ன செய்தது? அ.தி.மு.க., கொண்டு வந்த திட்டங்களை ரத்து செய்தது. அம்மா மினி கிளினிக்கை மூடினர். கிராமப்புற மக்கள் நோய் வாய்ப்பட்டால் சிகிச்சை பெற தொடங்கியதை முடக்கிவிட்டனர்.விவசாயிகளுக்கு கடன் ரத்து, பசுமை வீடு, கறவை மாடுகள், விலையில்லா ஆடுகள் திட்டம் என அ.தி.மு.க., கொண்டு வந்த திட்டங்களை கைவிட்டனர்.மாணவர்களின் அறிவுபூர்வ கல்விக்கு லேப் டாப் வழங்கியதையும் நிறுத்திவிட்டனர். மொத்தம் 52.35 லட்சம் பேருக்கு ரூ.7305 கோடியில் அத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.ஏழை மாணவர்கள் படிப்பை முடக்கியது தி.மு.க., அரசு. அரசு பள்ளியில் 3.80 லட்சம் பேர் படிக்கின்றனர்.மகளிருக்கு மாதம் ரூ.1,000 திட்டத்தை, நாங்கள் சட்டசபையிலும், பொது கூட்டத்திலும் வலியுறுத்தியதால் தான், 22 மாதம் கழித்து தந்தனர். அதுவும் 1 கோடி பேருக்கு தந்தனர்.அனைவருக்கும் தரப்படும் என கூறி ஏமாற்றினர். தற்போது, ஆட்சியின் செல்வாக்கு போனதால், மேலும் 30 லட்சம் பேருக்கு தருவதாக பொய் பிரச்சாரம் செய்கின்றனர். அடுத்து வரும் தேர்தலுக்காக பெண்களை ஏமாற்றவே இந்த அறிவிப்பு. தமிழகத்தில் நகரம், பேரூராட்சிகளில் வரியை உயர்த்திவிட்டனர்.கவர்ச்சியாக பேசி நம்பவைத்து ஏமாற்றி குடும்ப ஆட்சி தான் நடக்கிறது. கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என ஆள வந்துவிட்டனர். அந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.டாஸ்மாக்கில் 10 ரூபாய் வசூலித்து ஏழை வயிற்றில் அடிக்கும் தி.மு.க., ஆட்சி. 1 நாளில் 1.50 கோடி பாட்டில் விற்கிறது. ஆண்டுக்கு ரூ.5,400 கோடி கொள்ளையடிக்கின்றனர். அது ஒரு குடும்பத்துக்கே சென்றுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.