சேலம் : சேலத்தில் நேற்று வெயில் அளவு, 37.1 டிகிரி செல்சியஸ். இது பாரன்ஹீட் அளவில், 98.8 டிகிரி. காலை முதல் வெப்பத்தின் தாக்கம் காணப்பட்ட நிலையில், காற்றின் ஈரப்பதம் குறைவால் புழுக்கமும் அதிகமாகவே இருந்தது. மாலை வரை வெயில் நீடித்த நிலையில் இரவு, 7:00 மணியளவில் ஆங்காங்கே மேகமூட்டம் திரண்டு, இதமான காற்று வீசியது. 8:00 மணியளவில், தொடங்கிய மிதமழை, விட்டுவிட்டு சாரல் மழையாக பெய்தது. அது லேசான இடி, மின்னலுடன் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை நீடித்தது.சேலம் 4,5 ரோடு, புது, பழைய பஸ் ஸ்டாண்ட், சூரமங்கலம், கோரிமேடு, கன்னங்குறிச்சி, அம்மாபேட்டை, நெத்திமேடு, கொண்டலாம்பட்டி, சீலநாயக்கன்பட்டி உள்பட மாநகர் முழுவதும் பரவலாக மழை பெய்தது. அதனால், தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீரால் பாதசாரிகள் சிரமப்பட்டனர். சாலையை கடந்து செல்ல முடியாமல், இருசக்கர வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டனர். மாநகரின் பல இடங்களில், அடிக்கடி மின்தடையும் ஏற்பட்டது. * ஆத்துார் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று, இரவு, 7:00 மணியளவில் இடி, மின்னல், சூறாவளி காற்றுடன் கன மழை பெய்தது. இரவு, 9:00 மணி வரை என, இரண்டு மணி நேரமாக, பலத்த மழையாக பெய்தது. அதன்பின், லேசான மழை பெய்த நிலையில் இரவு, 10:00 மணிக்கு மேல், இடி, மின்னலுடன் தொடர்ந்து மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.* ஓமலுார் மற்றும் காடையாம்பட்டி வட்டத்தில் பல பகுதிகளில் மழை பெய்தது. ஒரு சில இடங்களில் பெய்த பலத்த மழையால், வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று பகலில் வெயில் வாட்டி வதைத்தாலும், மாலையில் பெய்த மழை குளுமையை தந்தது.