தாரமங்கலம் : தாரமங்கலம், பைப்பூரை சேர்ந்தவர் சாந்தி, 36. துட்டம்பட்டியை சேர்ந்தவர் ஜெய்சங்கர், 45. இவர்கள் இடையே, 20 ஆண்டுக்கு முன் திருமணமானது. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். ஜெய்சங்கர், பெங்களூரில் கல் உடைக்கும் தொழில் செய்து வந்தார். அவருக்கு வேறு பெண்ணுடன், 'தொடர்பு' ஏற்பட்டது. இதை அறிந்த சாந்தி, கணவரை கண்டித்துள்ளார். அவர் திருந்தாததால், சாந்தி கோபித்துக்கொண்டு மகன்களுடன் தாய் வீட்டுக்கு வந்துள்ளார்.கடந்த மார்ச், 18ல், சாந்தி, கணவர் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால் அங்கு மதியம், 12:30 மணிக்கு துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, சாந்தியின் தந்தை கோவிந்தராஜ், தாரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதில், 'மருமகன் ஜெய்சங்கர், வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்ததால் மகள் தற்கொலை செய்து கொண்டார்' என கூறியிருந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்த நிலையில் நேற்று, ஜெய்சங்கர், அவரது கள்ளக்காதலி சின்னபொண்ணுவை கைது செய்தனர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'ஜெய்சங்கர், பைப்பூரை சேர்ந்த சின்னபொண்ணு, 43. என்பவருடன் நெருங்கி பழகியுள்ளார். அவருடன், பெங்களூருவில் வாழ்ந்து வந்தார். அப்போது தனிமையில் இருந்த வீடியோவை, மனைவி சாந்திக்கு, ஜெய்சங்கர் அனுப்பியுள்ளார். இதில் மனமுடைந்த சாந்தி தற்கொலை செய்துகொண்டார். ஜெய்சங்கர், சின்னபொண்ணுவை தேடி வந்த நிலையில் துட்டம்பட்டி பைபாஸில் இருவரையும் பிடித்து கைது செய்தோம்' என்றனர்.