ஏ.டி.எம்.,ல் தவற விட்ட பணம் போலீசில் ஒப்படைத்த தொழிலாளி
சேலம், சேலம் அன்னதானப்பட்டியை சேர்ந்தவர் நடராஜமூர்த்தி. இவர் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம், நெத்திமேடு பகுதியில் உள்ள ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது மிஷினில், 20 ஆயிரம் ரூபாய் பாதி வெளியே வந்த நிலையில் இருந்துள்ளது. ஆனால் மையத்தின் வெளியே யாரும் இல்லை. உடனே நடராஜ மூர்த்தி, அந்த பணத்தை எடுத்து அன்னதானப்பட்டி போலீசில் ஒப்படைத்தார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த பணத்தை விட்டு சென்றது. சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த ஹரிகரன், 30, என்பவரின் பணம் என தெரியவந்தது.ஏ.டி.எம்.,ல் பணம் எடுக்கும் முயற்சியில் பணம் வராமல் தாமதமானது. இதனால் பணம் வருவதை பார்க்காமல் ஹரிகரன் வெளியே சென்றது தெரியவந்தது. இதையடுத்து ஹரிகரன் வங்கி கணக்கு விபரங்கள் குறித்த ஆய்வுக்கு பின், ஹரிகரனிடம் பணம் ஒப்படைக்கும் நடவடிக்கையை போலீசார் எடுத்து வருகின்றனர். தொழிலாளியின் நேர்மையான செயலை பொதுமக்கள், போலீசார் பாராட்டினர்.