உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மின்சாரம் தாக்கி பணியாளர் பலி: உறவினர்கள் சாலை மறியல்

மின்சாரம் தாக்கி பணியாளர் பலி: உறவினர்கள் சாலை மறியல்

இடைப்பாடி: தேவூர் அருகே, தற்காலிக பணியாளர் மின்சாரம் தாக்கி பலியானார்.சேலம் மாவட்டம், தேவூர் அருகே புளியம்பட்டி கோவிந்தன் காட்டு வலசு பகுதியை சேர்ந்த சித்தன் மகன் தங்கராஜ், 32. இவருக்கு மனைவி அகிலா, 28, ரூபினி, 4, என்ற பெண் குழந்தை உள்ளனர். தேவூர் மின்சார வாரியத்தில், தங்கராஜ் லைன்மேனுக்கு உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.தேவூர் அருகே காணியாளம்பட்டி கரிச்சிக்காடு பகுதியில், பிரதீப் என்பவரின் பட்டா நிலத்தில் உள்ள மின்கம்பத்தில் செடி, கொடிகள் படர்ந்து இருப்பதை அகற்ற, மின்வாரிய பணியாளர் குப்பன் அழைத்ததன்படி, தற்காலிக பணியாளர் தங்கராஜ் மின்சாரத்தை துண்டித்து விட்டு கம்பத்தின் மீது ஏறி நேற்று காலை பழுது பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக, மின்சாரம் தாக்கியதில் கம்பத்தில் தொங்கியபடியே தங்கராஜ் உயிரிழந்தார்.இறப்புக்கு காரணமான மின்வாரிய பணியாளர் மற்றும் நிலத்தின் உரிமையாளரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக்கூறி, இறந்தவரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இடைப்பாடி - குமாரபாளையம் செல்லும் சாலையில் அண்ணமார் கோவில் பகுதியில் நேற்று மதியம் 12:50 மணி முதல் 1:50 மணி வரை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.நீண்டநேர மறியலால் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் பயணிகள் அவதிப்பட்டனர். தேவூர் போலீசார், வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு எட்டாததால், தங்கராஜின் சடலம் மின்கம்பத்தில் 5 மணி நேரம் தொங்கியபடியே இருந்தது. சங்ககிரி டி.எஸ்.பி., ராஜா, இன்ஸ்பெக்டர் ரஜினி ஆகியோர் இடைப்பாடி தீயணைப்பு படை வீரர்கள் துணையுடன், கம்பத்தில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்த தங்கராஜ் உடலை கயிறு கட்டி இழுத்து மீட்டனர். பின்னர், பிரேத பரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ