| ADDED : ஜூலை 22, 2024 05:11 AM
திருப்புத்தூர்: திருப்புத்தூர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்த போலீசார் ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மீட்டனர்.திருப்புத்தூர் பகுதியில் சில மாதங்களாக வீடு, கோயில், கடைகளில் தொடர் திருட்டு நடந்தது. டி.எஸ்.பி., ஆத்மநாத-ன் தலைமையில் தனிப்படை அமைத்தனர். நாச்சியார்புரம் போலீஸ் ஸ்டேஷன் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி கருப்பையா 39, திருப்புத்தூர் தென்மாப்பட்டு பாபுஉசேன் 26, ஆகியோர் வந்த டூவீலரில் ரூ.2 லட்சம் தங்கம், வெள்ளி கட்டிகள் இருப்பதை கண்டறிந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கடந்தாண்டு திருப்புத்தூர் தி.மு.க., கவுன்சிலர் வீடு, மருதங்குடி ஆதினமிளகி ஐயனார் கோயில் மற்றும் நெற்குப்பை, எஸ்.வி.மங்கலம் பகுதி வீடுகளில் தொடர்ந்து திருட்டில் ஈடுபட்டு, இந்நகைகளை கொள்ளையடித்தது தெரிந்தது. இவர்கள் திருடிய பொருட்களை திருப்புவனம் பிரேம்குமார் 29, விக்னேஸ்வரன் 29, புதுக்கோட்டை ராஜேந்திரன் 32, திருப்புத்தூர் பாலா என்ற பால்பாண்டி 29 ஆகியோரிடம் கொடுத்து விற்பனை செய்தது தெரிந்தது. விசாரணையின் பேரில் 6 பேர்களையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ரூ. 15 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளிநகைகளை பறிமுதல் செய்தனர்.