| ADDED : ஜூன் 11, 2024 07:38 PM
பழையனுார்:சிவகங்கை மாவட்டம் பழையனுார் அருகே முதுவன்திடல் ஊராட்சி தலைவரை ஜாதியை சொல்லி திட்டியதாக மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் கேசவதாசன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். முதுவன்திடல் ஊராட்சி தலைவராக கவுரி 38, பதவி வகித்து வருகிறார். முதுவன்திடல் ஊராட்சி செயலராக இதே ஊரைச் சேர்ந்த ராஜ்குமார் பணியாற்றி வருகிறார். ராஜ்குமார் தலைவர் கையெழுத்தை போலியாக போட்டு பணம் எடுப்பதாகவும் முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் கவுரி மாவட்ட கலெக்டரிடம் கடந்தாண்டு ஜனவரியில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து ராஜ்குமார் பணியிடை மாற்றம் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.இந்நிலையில் ராஜ்குமாரின் உறவினரும் முதுவன்திடலைச் சேர்ந்தவருமான கேசவதாசன் சிவகங்கை மாவட்ட ஊராட்சி உதவி இயக்குனராக நியமிக்கப்பட்டார். அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்த போது தரக்குறைவாக பேசியதாக கவுரி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், 'பணியிடை மாற்றம் செய்யப்பட்ட ஊராட்சி செயலர் ராஜ்குமாரை மீண்டும் முதுவன்திடலுக்கு மாற்றம் செய்து தன்னை தலைவர் பதவியில் செயல்பட விடாமல் தடுத்ததோடு, சொந்த ஊருக்கு வந்த கேசவதாசன் மக்கள் மத்தியில் தன்னை அவதுாறாக பேசியதாக கவுரி பழையனுார் காவல் நிலையத்தில் தபால் மூலம் புகார் அளித்தார். புகாரின் பேரில் கேசவதாசன், ராஜ்குமார், அதே ஊரைச் சேர்ந்த மகேஷ்வரன் ஆகிய மூவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.