உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆனந்தவல்லி, சோமநாதர் திருக்கல்யாணம் இன்று தேரோட்டம் நடக்கிறது

ஆனந்தவல்லி, சோமநாதர் திருக்கல்யாணம் இன்று தேரோட்டம் நடக்கிறது

மானாமதுரை, : மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடந்த திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று தேரோட்டமும், நாளை வைகை ஆற்றில் அழகர் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட ஆனந்தவல்லி சமேத சோமநாதர் கோயிலில் ஏப்., 14 ல் கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கியது. தினமும் சுவாமி, அம்பாளுடன் சிம்மம், காமதேனு, கிளி, பூதம், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வருகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று காலை சுவாமிக்கு திருமஞ்சனம் நடந்தது. ஆனந்தவல்லி, சோமநாதர் பிரியாவிடையுடன் 4 ரத வீதிகளில் வலம் வந்து, மண்டபத்தில் ஊஞ்சலாடிய பின், பொன்னம்பலம் மண்டகப்படியில் எழுந்தருளினர்.சிவாச்சாரியார்கள் யாகம் வளர்த்து திருக்கல்யாண பூஜைகள் செய்த பின், வைரம் மற்றும் பரத்வாஜ் சிவாச்சாரியார் மாலைகளை மாற்றி நேற்று காலை 9:50 மணிக்கு சோமநாதர் ஆனந்தவல்லி திருக்கல்யாணம் நடந்தது. கோயிலில் பெண்கள் தாலி மாற்றி கொண்டனர். அம்மன், சுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் திருக்கல்யாண மொய் அளித்தனர். தேவஸ்தான மேலாளர் இளங்கோ தலைமையில், கண்காணிப்பாளர் சீனிவாசன், பரம்பரை ஸ்தானிகர் சோமசுந்தரர் ஏற்பாட்டை செய்திருந்தனர்.

இன்று தேரோட்டம்

கோயிலில் இன்று காலை 10:00 மணிக்கு தேரோட்டமும், இரவு 10:00 மணிக்கு அழகர் கோயில் அருகே கள்ளழகர் எதிர் சேவை நடைபெறும். நாளை காலை 6:15 மணிக்கு வீர அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வும் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்