| ADDED : ஜூன் 08, 2024 05:32 AM
காரைக்குடி : கண்மாயில் உள்ள அயிரை, கெளுத்தி, கெண்டை என சீசனுக்கு தகுந்தாற்போல் கிடைக்கும் மீன்களை மக்கள் ஆர்வமுடன் வாங்கி வருகின்றனர். மனிதர்களுக்கு மட்டுமல்லாது நீர்வாழ் உயிரினங்களுக்கும் கேடு விளைவிக்கக்கூடிய ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் வளர்ப்பதற்கும் விற்பதற்கும் தமிழகத்தின் பல பகுதிகளில் தடை உள்ளது. 5 முதல் 8 கிலோ வரை எடை கொண்ட இந்த மீன்களை மக்கள் அபாயம் தெரியாமல் வாங்கி செல்கின்றனர். இவ்வகை மீன்கள் நதி, குளம் குட்டைகளில் விடும்போது பிற மீன் வகைகளை அழித்து விடுகிறது. இந்த மீன்களை உண்ணும் போது உடலுக்கு பல்வேறு உபாதை ஏற்படுவதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் சாக்கோட்டை பகுதிகளில் விற்பனை செய்யப்படும் மீன்கள், ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களா என அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், கண்மாயில் கிடைக்கும் கெண்டை, ஜிலேபி மீன்களுக்கு தடை உள்ளது. கண்மாயில் கிடைக்கும் கருமை நிற ஜிலேபி மீன்கள் சாப்பிடக்கூடாது. தடை செய்யப்பட்ட மீன்கள் விற்பனை செய்யப்பட்டால் சாக்கோட்டை, சுற்றுப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.