| ADDED : ஜூன் 14, 2024 10:22 PM
கீழடி : கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் 10ம் கட்ட அகழாய்வு பணி ஜூன் 18ம் தேதி தொடங்க உள்ளநிலையில் இடத்தை சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது.கடந்தாண்டு ஏப்ரலில் தொடங்கி செப்டம்பர் வரை நடந்த அகழாய்வில்பாம்பு உருவ சுடுமண் பொம்மை. ஸ்படிக எடைக்கல், விலங்கு உருவ பொம்மை உள்ளிட்ட 804 பொருட்கள் கண்டறியப்பட்டன. 10ம் கட்ட அகழாய்வு பணிகள் 7ம் கட்ட அகழாய்வு நடந்த இடத்திற்கு எதிரில் உள்ள ஜவஹர், பிரபாகரன், கார்த்திக் ஆகிய மூவருக்கு சொந்தமான நிலத்தில் நடைபெற உள்ளன. 18ம் தேதி முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் கீழடியில் பணிகளை தொடங்கி வைக்க உள்ள நிலையில் இடத்தை சுத்தம் செய்யும் பணி நேற்று தொடங்கியுள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் இடம் சுத்தம் செய்யப்பட்டு அகழாய்வு பணிகளுக்கு ஏற்ப பத்து அடி நீள அகலத்தில் அளவீடு செய்யப்படும், அதன்பின் பணிகள் தொடங்கப்படும்.வழக்கமாக செப்டம்பரில் அகழாய்வு பணி நிறைவு பெறும், செப்டம்பருக்கு பின் மழை காலம் என்பதால் பணிகள் நடைபெறாது, இந்தாண்டு தாமதமாக பணி தொடங்கப்படுவதால் 100 நாட்கள் மட்டுமே பணிகள் நடைபெற வாய்ப்புள்ளது. அகழாய்வு பணிகளுக்கான ஏற்பாடுகளை தொல்லியல் துறை இயக்குனர் சிவானந்தம், இணை இயக்குனர் (கீழடி பிரிவு) ரமேஷ், தொல்லியல் ஆய்வாளர்கள் அஜய் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.