| ADDED : மே 22, 2024 07:52 AM
திருப்புத்துார் : திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு நேற்று கொட்டும் மழையில் தேரோட்டம் நடந்தது.குன்றக்குடி ஐந்து கோயில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் வைகாசி விசாக திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். மே13ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினசரி உற்ஸவ திருத்தளிநாதரும், சிவகாமி அம்பாளும் வாகனங்களில் திருவீதி வலம் வந்தனர். நேற்று ஒன்பதாம் திருநாளை முன்னிட்டு அதிகாலை 5:30 மணி அளவில் முதல் தேரில் விநாயகரும், இரண்டாவது தேரில் சோமஸ்கந்தர், பிரியாவிடையும், மூன்றாவது தேரில் சிவகாம சுந்தரி அம்பாளும் எழுந்தருளினார்.தொடர்ந்து பக்தர்கள் தேரில் எழுந்தருளிய சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். மாலை 4:50 மணிக்கு தேருக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகள் முன்னிலையில் பூஜை நடந்து தீபாராதனைக்கு பின் தேரோட்டம் துவங்கியது. அமைச்சர் பெரியகருப்பன்,முன்னாள் எம்.பி.கோகுல இந்திரா பங்கேற்றனர். முதல் தேர் கீழரத வீதி வளையும் முன்பே மழை பெய்யத்துவங்கியது. மழையில் நனைந்தவாறே 3 தேர்களையும் பக்தர்கள் வடம் பிடித்தனர். மழை தொடந்ததால் மாலை 5:15 மணிக்கு பக்தர்கள் வடம் பிடிப்பது நின்றது.மேலும் மழை தொடர்ந்ததால் மாலை 6:00 மணிக்கு மூன்றாவது தேரை கொட்டும் மழையில் பக்தர்கள் இழுத்தனர். தேரோடும் வீதியில் 3 ரோடு சந்திப்பில் வடிகாலில் மழைநீர் வெளியேறாததால் ரோடு முழுவதும் நீர் தேங்கி தேர் வடம் பிடிக்க முடியாமல் பக்தர்கள் தவித்தனர். விநாயகர் தேர் மட்டும் நான்கு வீதிகளிலும் சென்று நிலைக்கு தயாராக நிறத்தப்பட்டது.