| ADDED : மார் 31, 2024 11:39 PM
சிவகங்கை : நட்சத்திர பேச்சாளர்கள்,வேட்பாளர் பெயரை சொல்லி ஓட்டு சேகரித்தால், அவர் வந்து செல்லும் செலவு வேட்பாளர் செலவு கணக்கில் தான் ஏற்றப்படும் என சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித் பேசினார். சிவகங்கையில் தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றுவது குறித்த வேட்பாளர், அவர்களது பிரதிநிதிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் தலைமை வகித்தார். தேர்தல் பார்வையாளர்கள் (பொது) எஸ்.ஹரீஸ், (செலவினம்) மனோஜ்குமார் திரிபாதி முன்னிலை வகித்தனர். உதவி தேர்தல் அலுவலர்கள்விஜயகுமார், பால்துரை, ஜெயமணி, சரவண பெருமாள் பங்கேற்றனர். கலெக்டர் பேசியதாவது: வேட்பாளர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் பெற்ற அனுமதி கடிதத்தின் படியே பிரசாரத்திற்கு வாகனங்கள் எடுத்து செல்ல வேண்டும். கூடுதலாக வாகனங்கள் பயன்படுத்தினால்,வேட்பாளர் செலவு கணக்கில் ஏற்றப்படும்.இத்தேர்தலில் 20 வேட்பாளர் போட்டியிடுவதால் 2 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். இதற்காக பிற மாவட்டங்களில் இருந்து கூடுதல் மிஷின்கள் பெறப்படும். தொகுதியில் 40 சதவீதத்திற்கு மேல் பாதிப்புள்ள மாற்றுத்திறனாளி, 80 வயதிற்கு மேற்பட்ட முதியவர் என 3,000 பேர் உள்ளனர். இவர்களிடம் நேரடியாக ஓட்டு சேகரிக்கப்படும். வேட்பாளர்கள் செலவு செய்யும் தொகை ரூ.16,000க்கு மேல் சென்றால், அந்த பணத்தை காசோலை மூலம் தான் வழங்க வேண்டும். நட்சத்திர பேச்சாளர் பிரசாரம் செய்வதால் வரும் செலவினம் கட்சி பெயரில் வைக்கப்படும்.அவர் வேட்பாளர் பெயரை குறிப்பிட்டு ஓட்டு சேகரித்தால், வேட்பாளர் செலவு கணக்கில் தான் வரவு வைக்கப்படும். பெண்கள் ஓட்டுச்சாவடிக்குள் சிறு குழந்தையுடன் செல்லலாம்.