உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கீழடி அகழாய்விற்காக 4வது குழி தோண்டும் பணி தொடக்கம்

கீழடி அகழாய்விற்காக 4வது குழி தோண்டும் பணி தொடக்கம்

கீழடி : கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் நடந்து வரும் பத்தாம் கட்ட அகழாய்வில் நான்காவது குழி தோண்டும் பணி தொடங்கியுள்ளது.கீழடியில் கடந்த ஜூன் 18ம் தேதி 10ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கின. முதல் கட்டமாக இரு குழிகள் தோண்டப்பட்டு நடந்த அகழாய்வில் பாசிகள், கண்ணாடி மணிகள், மீன் உருவம் பொறிக்கப்பட்ட இரு பானை ஓடுகள், தமிழி எழுத்து கொண்ட பானை ஓடு, யானை தந்தத்தால் செய்யப்பட்ட ஆட்டக்காய் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டன. முதலில் தோண்டப்பட்ட குழியில் சரிந்த நிலையில் கூரை ஓடுகள், மூங்கில் குச்சிகள் வைப்பதற்காக தோண்டப்பட்ட துளைகள், சேதமடைந்த பானைகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டன. ஏற்கனவே 5ம் கட்ட அகழாய்விலும் சரிந்த நிலையில் கூரை ஓடுகள், மூங்கில் குச்சிகள் நடுவதற்காக தோண்டப்பட்ட துளைகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டன. அதன் தொடர்ச்சியாக வேறு எதுவும் கிடைக்கவில்லை. எனவே 10ம் கட்ட அகழாய்வில் துளைகள், சரிந்த கூரை ஓடுகள் கண்டறியப்பட்ட குழி அருகே அகழாய்வு பணிகள் செய்ய வேண்டும் என தொல்லியல் துறை ஆணையாளர் சிவானந்தம் ஆய்வின் போது தெரிவித்திருந்தார். இதனையடுத்து மூன்றாவது குழி சில நாட்களுக்கு முன் தோண்டப்பட்டது. 3வது குழியிலும் சரிந்த கூரை ஓடுகள் தென்பட்டதால் பணிகளை நிறுத்திவிட்டு நான்காவது குழி தோண்டும் பணி நடந்து வருகிறது. 3வது குழியில் உள்ள சுடுமண் பொருட்களின் தொடர்ச்சி நான்காவது குழியில் கிடைக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. புதிதாக தோண்டப்பட்ட குழியில் பாசிகள், கண்ணாடி மணிகள், எலும்புகள், பானை ஓடுகளும் கண்டறியப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை