| ADDED : ஜூலை 27, 2024 05:24 AM
கீழடி, : கீழடியில் இதுவரை நடந்த அகழாய்வில் குறியீடுகளுடன் கூடிய பானை ஓடுகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.கீழடியில் மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் 2015ம் ஆண்டு அகழாய்வு பணிகள் தொடங்கின. மூன்று கட்ட அகழாய்விற்கு பின் தமிழக தொல்லியல் துறை ஆணையர் சிவானந்தம் தலைமையில் கீழடி பிரிவு இயக்குனர் ரமேஷ், இணை இயக்குனர் அஜய் உள்ளிட்டோர் தொல்லியல் துறை மாணவர்கள், தொழிலாளர்களுடன் அகழாய்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கீழடி அகழாய்வில் குறியீடுகளுடன் கூடிய பானை ஓடுகள் அதிகளவில் கிடைத்து வருகின்றன. இதில் கோட்டு சித்திரமாக மீன் உருவம், வில் அம்பு , படகு உள்ளிட்டவைகளும், தமிழி எழுத்துகள், வரிவடிவ எழுத்துகள் உள்ளிட்டவைகளும் கண்டறியப்பட்டுள்ளன. பெரும்பாலும் பானை ஒடுகளில் தான் குறியீடுகள் காணப்படுகின்றன. ஏழாம் கட்ட அகழாய்வில் உறைகிணற்றில் மீன் உருவம் காணப்பட்டது. மற்றபடி சுடுமண் பானைகள், பொம்மைகளில் குறியீடுகள் ஏதும் இல்லை. பண்டைய கால மக்கள் தங்கள் கலைத்திறனை காட்ட பானைகளில் குறியீடுகள், படங்களை வரைந்திருக்க கூடும். வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகையில்: கல்வியறிவு பெற்ற சமூகம் வாழ்ந்ததற்கான அடையாளம் தான் குறியீடுகள், பண்டைய காலத்தில் மக்கள் குழுக்களாக வாழ்க்கை நடத்தி வந்தனர். எனவே ஒவ்வொருவரும் தங்களை அடையாளம் காண குறியீடுகளை பயன்படுத்தியிருக்க கூடும், இதில் பானைகள் செய்யும் போதே குறியீடு பொறிப்பது ஒன்று, பானை செய்த பின் குறியீடு பொறிப்பது என இருவகை உண்டு, ஆனால் 2வது வகை எளிதில் அழிந்து விடும், முதல் வகைதான் தற்போது கிடைத்து வருவது. இதுவரை கிடைத்த குறியீடுகளை வைத்து தனியாக ஆய்வு மேற்கொண்டால் தான் குறியீடுகளின் பயன்பாடு தெரியவரும், இதுவரை குறியீடுகள் குறித்த தனி ஆய்வு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை, எனவே தமிழக தொல்லியல் துறை குறியீடுகள் குறித்து தனியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.