உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மருத்துவமனையில் மருந்தாளுனர் பணியிடம் காலி

மருத்துவமனையில் மருந்தாளுனர் பணியிடம் காலி

மானாமதுரை: மானாமதுரை அரசு மருத்துவமனையில் மருந்தாளுனர் பணியிடம் காலியாக இருப்பதால் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் மருந்து கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் சுற்று வட்டார கிராம பகுதிகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். 50க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இம்மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாக மருந்தாளுனர் பணியிடம் காலியாக இருப்பதால் உரிய நேரத்தில் நோயாளிகளுக்கு மருந்து கிடைக்காமல் மிகுந்த அவதிக்குஉள்ளாகி வருகின்றனர். தினந்தோறும் காலை 7:30 மணிக்கு வெளி நோயாளிகள் பிரிவு ஆரம்பிக்கும் நேரத்தில் மருந்தகமும் செயல்பட வேண்டியநிலையில் தற்போது மாற்றுப் பணியில் வரும் மருந்தாளுனர் காலை 9:00 மணி வரை வராமல் இருப்பதால் மருந்தகத்திற்கு முன் நோயாளிகள் காத்துக்கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நோயாளிகள் சிலர் கூறுகையில், கிராமப் பகுதிகளிலிருந்து அதிகாலையிலேயே மருத்துவமனைக்கு வருகின்ற நிலையில் டாக்டரை பார்த்த பிறகு மருந்து வாங்குவதற்காக சென்றால்காலை 9:00மணி வரை மருந்தகம் திறக்கப்படாமல் உள்ளது. அதற்குப் பிறகு மருந்தாளுநர் வரும் நேரத்தில் கூட்டமாக இருப்பதால் மருந்துகள் வாங்க மேலும் கூடுதல் நேரம் ஆவதால் நோயின் தன்மை மேலும் அதிகரித்து வருகிறது. மருத்துவமனை அதிகாரிகளிடம் கேட்டால் உரிய பதில் அளிக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். அதேபோன்று மதியம் 1:00 மணிக்கு மேல் மருந்தகத்தில் மருந்தாளுநர் இல்லாமல் இருப்பதால் மருந்துகள் வாங்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம் என்றனர். இது குறித்து மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் அலுவலக அதிகாரிகள் கூறுகையில், தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுனர் பணியிடங்கள் பெருமளவில் காலியாக உள்ள நிலையில் அவற்றை நிரப்ப தற்போது நேர்காணல் முடிவுற்ற நிலையில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமுலில் உள்ளதால் பணியிடங்கள் நிரப்ப முடியாத சூழ்நிலை உள்ளது.தேர்தல் நன்னடத்தை விதிகள் முடிந்தவுடன் விரைவில் மருந்தாளுனர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை