| ADDED : மே 05, 2024 05:11 AM
காரைக்குடி, : ஆன்லைனில் வருமானம், இருப்பிடம் உள்ளிட்ட சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்து பல வாரங்களாகியும் கிடைக்காததால் மாணவர்கள் பள்ளி சேர்க்கையில் சிரமப்படுகின்றனர். பள்ளி மற்றும் கல்லுாரி தேவைக்காக மாணவர்கள் இருப்பிடம், ஜாதி, வருமானச் சான்றிதழ் உட்பட பல்வேறு சான்றிதழ்களுக்காக ஆன்லைன் மூலம் பதிவு செய்கின்றனர். அந்தந்த வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து ஓரிரு நாட்களில் வழங்கினர். மாணவர்கள் எளிதாக சான்றிதழ்களை பெற்று வந்தனர். தற்போது பள்ளிகளில் ஆண்டுத் தேர்வு முடிவு அடுத்த வகுப்புக்கு மாணவர்கள் செல்வதோடு, பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கையும் நடந்து வருகிறது. மாணவர்கள் இருப்பிடம், ஜாதி, வருமானச் சான்றிதழ் உட்பட பல்வேறு சான்றிதழ்களுக்காக ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளனர். ஆனால் பதிவு செய்து பல நாட்கள் கடந்தும் இதுவரை சான்றிதழ் கிடைக்கவில்லை. பெற்றோர்கள் கூறுகையில்: தற்போது பள்ளிகளில் அட்மிஷன் நடந்து வருவதால் பெற்றோர்கள் சேர்க்கைக்காக பள்ளிகளுக்கு அலைய வேண்டிய நிலை உள்ளது. மாணவர் சேர்க்கைக்கு ஜாதி, வருமானம் இருப்பிடம் ஓ.பி.சி., உட்பட பல்வேறு சான்றிதழ் கட்டாயம் தேவைப்படுகிறது, ஆன்லைனில் விண்ணப்பித்து பல வாரங்கள் காத்துக் கிடக்க வேண்டியுள்ளது. மாணவர்களின் தேவையை அறிந்து உடனடியாக சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தாசில்தார் தங்கமணி கூறுகையில்: தற்போது வழக்கத்தை விட சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் அதிக அளவில் வருகிறது. ஒவ்வொரு திங்கள்கிழமையும் ஒரு வாரத்திற்குள் அனைத்தும் முறையாக வழங்கப்படுகிறது. தாமதமாகும் பகுதியை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.