| ADDED : ஜூன் 21, 2024 04:35 AM
சிவகங்கை: சிவகங்கை வழியாக பெங்களூரூ சென்ற கர்நாடகா பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில், வெளிமாநில பதிவு எண்ணுடன்854 ஆம்னி பஸ்கள் ஓடுவதாகவும், இதனால் தமிழகத்திற்கு வரிவருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதை தவிர்க்க வெளிமாநில பதிவு எண்ணுடன் ஓடும் ஆம்னி பஸ்களை பறிமுதல் செய்ய போக்குவரத்து துறை உத்தரவிட்டது. நேற்று வரை தமிழக அளவில் 50 க்கும் மேற்பட்ட பிற மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்களை அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பறிமுதல் செய்துஉள்ளனர். நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு ராமநாதபுரத்தில் இருந்து சிவகங்கை வழியாக பெங்களூருவிற்கு ஆம்னி பஸ் சென்றது.சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித், வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன் ஆகியோருக்கு புகார் வந்தது. வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையில், போக்குவரத்து ஆய்வாளர் மாணிக்கம் உள்ளிட்டோர் பயணிகளுடன் வந்த கர்நாடகா (கே.ஏ.,42 ஏ.5615) பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்சை பறிமுதல் செய்தனர். பெங்களூரூவிற்கு மாற்று ஏற்பாடு
வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன் கூறியதாவது: போக்குவரத்து கமிஷனர் உத்தரவுபடி, நேற்று முன்தினம் இரவு பெங்களூரூ சென்ற ஆம்னி பஸ்சை பறிமுதல் செய்து, அதில் பயணம் செய்த 31 பயணிகளுக்கு காரைக்குடி அரசு விரைவு பஸ் ஒன்றை ஏற்பாடு செய்து பெங்களூருவிற்கு அனுப்பிவிட்டோம். காரைக்குடியில் 4 இடங்களில் கர்நாடகா, புதுச்சேரி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ் நிறுத்தப்பட்டுஉள்ளன. அந்த பஸ்களுக்குபோலீஸ் பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து வருகிறோம். பிற மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்களை தமிழக பதிவு எண்ணாக மாற்றி பின்னரே பறிமுதல் செய்த பஸ்கள் இயக்க அனுமதிக்கப்படும்.