| ADDED : மார் 23, 2024 01:52 AM
மானாமதுரை:அடங்காப்பிடாரியாக செயல்படும் அமலாக்க துறையை நீதித்துறை தான் கட்டுப்படுத்த வேண்டுமென சிவகங்கை எம்.பி., கார்த்தி தெரிவித்தார்.சிவகங்கை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்படும் முன்பே கார்த்தி எம்.பி., முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார். மானாமதுரையில் தி.மு.க., எம்.எல்.ஏ., தமிழரசியை சந்தித்து ஆதரவு கேட்ட அவர் கூறியதாவது: டில்லியில் 2 முறை தொடர்ந்து முதல்வராக உள்ள கெஜ்ரிவாலை அமலாக்க துறையை வைத்து கைது செய்துள்ளதை கண்டிக்கிறோம். காங்.,கட்சியின் கணக்குகளையும் முடக்கியுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர்கள் செயலிழந்து இருக்க வேண்டும் என பா.ஜ., நினைக்கிறது. அடங்காப்பிடாரியான அமலாக்கத்துறையை நீதித்துறை தான் கட்டுப்படுத்த வேண்டும்.தமிழகத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் இன்னும் வழங்கப்படவில்லை. ஊழல் குற்றச்சாட்டு உள்ள மற்ற கட்சிகளை சேர்ந்தவர்கள் பா.ஜ.,வில் சேர்ந்தால் அவர்களை கண்டு கொள்வது கிடையாது. ஆனால் எதிர்க்கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கின்றனர்.காங்., வேட்பாளர் பட்டியல் குறித்து மேலிடம் தான் முடிவு செய்ய வேண்டும்.பா.ஜ., கூட்டணியிலிருந்து அ.தி.மு.க., பிரிந்ததை வரவேற்கிறேன். அனைத்து கட்சிகளின் தேர்தல் அறிக்கையும் எதிர்காலத்தில் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்யப் போகிறோம் என்பதைத்தான் சொல்லும். தி.மு.க.,வும் தங்களது தேர்தல் அறிக்கையில் சொல்லியுள்ளது.சிவகங்கை தொகுதிக்காக நான் தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் வைத்த கோரிக்கைகளான வேளாண்மை கல்லுாரி, சட்டக் கல்லுாரி கொண்டுவரப்பட்டுள்ளது. முடங்கி கிடந்த ஸ்பைசஸ் பார்க் மீண்டும் செயல்பட துவங்கியிருக்கிறது.நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்கும் மாநிலங்கள் வெளியே வருவதற்கான சட்டத் திருத்த மசோதாவை இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால் கண்டிப்பாக நிறைவேற்றும் என்றார்.