| ADDED : மே 10, 2024 04:49 AM
சிவகங்கை: மதுரை-தொண்டி இடையே ஓடும் அரசு பஸ்களை 3 இடங்களில் 30 நிமிடங்கள் வரை நிறுத்தி செல்வதால், காலவிரயமாகிறது. இதை தவிர்க்க கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். மதுரையில் இருந்து சிவகங்கை வழியாக தொண்டிக்கு தினமும் காரைக்குடி மண்டல அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 16 பஸ்கள் இயக்கப்படுகின்றன. நாள் ஒன்றுக்கு ஒரு பஸ் 2 முதல் 3 ட்ரிப் வரை மதுரை - தொண்டி இடையே இயக்கப்படுகிறது. மதுரையில் பஸ்சில் ஏறும் பயணிகள் தொண்டி செல்ல மூன்று முதல் மூன்றரை மணி நேரம் ஆகிறது. அரசு பஸ் டிரைவர்கள் சிவகங்கை, காளையார்கோவில், தேவகோட்டை ஆகிய பஸ் ஸ்டாண்ட்களில் (தலா 10 நிமிடம் வீதம்) அதிக பட்சம் 30 நிமிடம் வரை நிறுத்தி செல்கின்றனர். இதனால், மதுரையில் இருந்து தொண்டிக்கு செல்லும் பயணிகள் நீண்ட நேரம் பயணிக்கும் நிலை ஏற்படுகிறது. இதை தவிர்க்க மதுரை - தொண்டி இடையே மேலும் 5 பஸ்களை கூடுதலாக இயக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். கூடுதல் பஸ் கோரிக்கை வைப்போம்: காரைக்குடி (வணிகம்) துணை பொது மேலாளர் நாகராஜன் கூறியதாவது: மதுரை-தொண்டி இடையே காலை, மாலையில் தான் பஸ்சில் பயணிகள் அதிகம் வந்து செல்கின்றனர். மற்ற நேரங்களில் குறைவாக தான் உள்ளது. கூடுதல் பஸ் இயக்குவது குறித்து அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கிறோம். திருவிழா, முகூர்த்தம், வார விடுமுறை நாட்களில் மதுரை - தொண்டி இடையே சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது, என்றார்.