இளையான்குடியில் செப்.2ல் மாறநாயனார் குருபூஜை விழா
இளையான்குடி: இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் ஞானாம்பிகை அம்மன் கோயிலில் வரும் செப்.2ம் தேதி மாற நாயனார் குருபூஜை விழா நடைபெற உள்ளது.63 நாயன்மார்களுள் ஒருவரான இளையான்குடி மாற நாயனார் குருபூஜை விழா வருடம் தோறும் ஆவணி மாதம் மகம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டிற்கான குருபூஜை விழா சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்துக்குட்பட்ட ராஜேந்திர சோழீஸ்வரர், ஞானாம்பிகை கோயிலில் வருகிற செப்.2 ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு காலை 9:00 மணிக்கு ஹோமங்கள் வளர்க்கப்பட்டு பூஜை நடைபெற்று மூலவர் ராஜேந்திர சோழீஸ்வரர், ஞானாம்பிகை அம்பாள், மாறநாயனார்,உற்சவமூர்த்திகள் சோமாஸ்கந்தருக்கு அபிஷேக,ஆராதனை, தீபாராதனை நடைபெற உள்ளது.மாலை 6:00 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவும், இரவு 8:30 மணிக்கு மாறநாயனார் புராணம் வாசித்து நாயனாருக்கு சிவபெருமான் அருளிய ஜோதிக்காட்சி இரவு 10:00 மணிக்கு கைலாய வாத்தியங்கள் முழங்க உற்சவமூர்த்திகள் திருவீதி உலா நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை இளையான்குடி மாறநாயனார் அடியார் திருக்கூட்டத்தினர் செய்து வருகின்றனர்.