| ADDED : ஜூலை 15, 2024 04:06 AM
திருப்பாச்சேத்தி : திருப்பாச்சேத்தி டோல்கேட்டில் கடந்த ஆண்டு கட்டணம் வசூலித்தவர்கள் மின் கட்டணம், பராமரிப்பு கட்டணம் செலுத்தாததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு சர்வீஸ் ரோடு இருட்டில் உள்ளது. கழிப்பறை பூட்டப்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மதுரை -- பரமக்குடி நான்கு வழிச்சாலையில் திருப்பாச்சேத்தியில் டோல்கேட் அமைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டணம் வசூலிக்க ஒவ்வொரு வருடமும் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு ஒப்பந்தகாரர் நியமிக்கப்படுவார். புதிய ஒப்பந்தக்காரர்களிடம் பழைய ஒப்பந்தகாரர்கள் கணக்குகளை ஒப்படைக்க வேண்டும். இந்தாண்டு இதுவரை புதிய ஒப்பந்தகாரர்களிடம் கணக்குகளை ஒப்படைக்காததால், எந்த பணியும் மேற்கொள்ளப்படவில்லை. நான்கு வழிச்சாலையில் சென்று வர தலா நான்கு பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. கட்டணம் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு வசூலிக்கப்படுகிறது.மொத்தமுள்ள எட்டு பாதைகளில் நான்கு பாதைகளில் கம்ப்யூட்டர்கள் பழுதடைந்துள்ளன. பழுது சரி செய்யப்படாததால் தலா இரண்டு பாதைகளில் மட்டும் வாகனங்கள் சென்று வருகின்றன. தினசரி வாகனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. திருப்பாச்சேத்தி டோல்கேட் வழியாக 300க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் தினசரி சென்று வருகின்றன.இதுதவிர தினசரி சரக்குகள் கொண்டு செல்லும் லாரிகள், கட்டுமான பொருட்கள் கொண்டு செல்லும் லாரிகள் என ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் கழிப்பறைகள், ஓய்வறைகள், தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்தாண்டு டோல்கேட்டில் கட்டணம் வசூலித்தவர்கள் மின் கட்டணம், பராமரிப்பு கட்டணம் செலுத்தாததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு சர்வீஸ் ரோடு இருட்டில் உள்ளது. கழிப்பறை பூட்டப்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.