தேர்வு எழுதிய மாணவர்களுக்கு உணவு வாங்கி கொடுத்த ஆசிரியர்
திருப்புவனம் : திருப்புவனத்தில் வட்டார அளவில் தேர்வு எழுத வந்த அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ஆசிரியர் பிரியாணி, குஸ்கா, பரோட்டா வாங்கி கொடுத்து மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.மத்திய அரசின் தேசிய வருவாய் வழி மற்றும் கல்வி உதவி தொகைக்காக 8ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு திருப்புவனம் வட்டார அளவில் ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளியில் தேர்வு நடந்தது. 558 மாணவ, மாணவியர் தேர்வில் பங்கேற்றனர். கிராமப்புறங்களில் இருந்து அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவியர்களை அழைத்து வந்திருந்தனர். காலை 10:00 மணி முதல் மதியம் ஒரு மணி வரை தேர்வு நடந்தது. தேர்வு முடிந்த பின் மீண்டும் ஆசிரியர்கள் கிராமங்களுக்கு மாணவ, மாணவியர்களை அழைத்து சென்றனர். திருப்பாச்சேத்தி தெற்கு நடுநிலைப்பள்ளியில் இருந்து 25 மாணவ, மாணவியர்களை ஆசிரியர் கதிரவன் அழைத்து வந்திருந்தார். மதிய நேரம் என்பதால் மாணவ, மாணவியர்களுக்கு ஆசிரியர் சொந்த செலவில் ஹோட்டலில் பிரியாணி, குஸ்கா, பரோட்டா உள்ளிட்டவற்றை சாப்பிட வாங்கி கொடுத்தார். மத்திய அரசின் இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு 9,10,11,12ம் வகுப்புகளில் படிக்க மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.