| ADDED : ஜூலை 29, 2024 10:47 PM
சிங்கம்புணரி : சிங்கம்புணரி ஒன்றிய அலுவலக புதிய கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் நேற்று திறந்து வைத்தார். ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்த விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் குத்து விளக்கு ஏற்றி கட்டடத்தை பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தார்.இரண்டு நாட்களுக்கு முன் டெண்டர் ரத்தை கண்டித்து போராட்டம் நடத்திய நிலையில் அ.தி.மு.க.,வைச் சேர்ந்த சேர்மன் திவ்யா பிரபு இவ்விழாவை புறக்கணித்தார். விழாவில் பேசிய அமைச்சர் ரூ.3.57 கோடி மதிப்பில் கட்டடம் கட்டிமுடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ள இந்த நல்ல விழாவை ஒன்றிய சேர்மன்புறக்கணித்தது வருந்தத்தக்கது. மாற்றுக் கட்சி என்பதால் புறக்கணித்து இருக்கிறார் என்றால், அது அரசியல் நாகரிகமற்ற செயல். தனது பணி ஒரு கட்சி சார்பு இல்லாமல் அனைத்து மக்களுக்குமானதாக இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.அதை பின்பற்றியே நாங்களும் நடக்கிறோம். இந்த விழாவை புறக்கணித்ததற்கு பதிலாக, இது தி.மு.க., அரசு நிதி ஒதுக்கி கட்டப்பட்ட கட்டடம், அதிலிருந்து நான் பணியாற்ற மாட்டேன் என்று அவர் இங்கிருந்து போயிருந்தால், அவரது மன உறுதியை பாராட்டி இருக்கலாம்.ஒருவேளை இனி இந்த அலுவலகத்துக்கு வரமாட்டேன் என அவர் முடிவு எடுத்து இருப்பார் என்று நான் கருதுகிறேன்.அ.தி.மு.க., சேர்மன் என்பதால் இந்த ஒன்றியத்தை நாங்கள் புறக்கணிக்கவில்லை. இந்த மூன்றாண்டுகளில் 90 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு பணிகள் ஒதுக்கி இருக்கிறோம் என்றார்.அமைச்சர் சென்ற பின் சேர்மன் திவ்யா பிரபு அலுவலக கட்டடத்திற்கு வந்தார்.அவர் தெரிவித்ததாவது: வளர்ச்சிப் பணிகளுக்கு நிதி ஒதுக்காமல், டெண்டர்விடப்பட்ட பணிகளை ரத்து செய்ததை கண்டித்து நாங்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கையில் அதை அரசு கண்டுகொள்ளவில்லை.அதனால் விழாவை புறக்கணித்துள்ளேன். என்னை ராஜினாமா செய்து விட்டுப் போகச் சொல்ல அமைச்சர் யார். அவரா என்னை தேர்ந்தெடுத்தார். மக்கள் தேர்ந்தெடுத்த பதவியில் இருக்கிறேன். ஆட்சி அதிகாரம் இருக்கிறது.அமைச்சராக இருக்கிறோம் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசலாமா. அ.தி.மு.க., சேர்மன் என்பதால் தான் இந்த ஒன்றியத்தை புறக்கணிக்கிறார்கள் என்றார்.