| ADDED : மே 07, 2024 05:20 AM
திருப்புத்துார்:திருப்புத்துார் மதுரை ரோட்டில் வங்கிக்கு முன் நடைபெறும் திருட்டு சம்பவங்களை தடுக்க கூடுதல் கண்காணிப்பை போலீசார் தீவிரப்படுத்த பொதுமக்கள் கோரியுள்ளனர். திருப்புத்துார் காரைக்குடி ரோடு வடிவேலு மகன் ஆனந்தன் 61. இவர் மீன் வியாபாரம் செய்பவர். சில நாட்களுக்கு முன் இவர் மதுரை ரோட்டில் அரசு வங்கியில் நகைக் கடன் ரூ.1 லட்சத்து 95 ஆயிரம் வாங்கியுள்ளார்.பணத்தை வாங்கிக் கொண்டு வெளியே வந்து டூ வீலரில் வைத்துள்ளார். அப்போது, அங்கிருந்த ஒருவர் கீழே சிதறிக் கடந்த ரூபாய்களை ஆனந்தனிடம் காண்பித்து உங்கள் பணமா என்று கேட்டுள்ளார். ஆனந்தன் அந்தப் பணத்தை குனிந்து எடுத்து பார்த்து எண்ணி விட்டு திரும்பி டூவீலரில் பார்க்கையில் அங்கு வைத்திருந்த பணத்தை காணவில்லை.அதில் நகைக்கடன் ரூ.1 லட்சத்து 95 ஆயிரம் மற்றும் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த ரூ 50 ஆயிரம். என்று மொத்தமாக ரூ 2.45 லட்சம் பறி போனது தெரிந்தது. பணம் கீழே கிடப்பதாக கூறிய நபரையும் காணவில்லை. டூவிலரில் தப்பித்து சென்றது தெரிந்தது. ஆனந்தன் டவுன் போலீசில் புகார் செய்தார்.விசாரணையில் தேவையான இடங்களில் கேமரா பொருத்தப்படாததும், பொருத்தப்பட்ட கேமராக்களின் பதிவான படங்கள் தரமில்லாததாலும் சரியான துப்பு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. திருப்புத்துார் மதுரை ரோட்டில் பல முக்கிய வங்கிகள், நிதி நிறுவனங்கள், நகைக் கடைகள் தொடர்ச்சியாக உள்ளன. குற்றவாளிகள் தப்பிக்க வசதியாக பல குறுக்கு ரோடுகளும் உள்ளன. ஆனால் அதற்கேற்ப ரோட்டில் கேமரா கண்காணிப்பு இல்லை என்று. இதனால் பல ஆண்டுகளாக வங்கிகள் முன்பாக நடைபெற்ற பல திருட்டு சம்பவங்களில் குற்றவாளிகள் சிக்கவில்லை. மர்மக் கும்பல் வங்கிக்கு முன்பாக நோட்டமிடுவதும், வங்கியிலிருந்து பணத்துடன் வருபவரை ஏமாற்றி திருடுவதும் தொடர்கிறது.இதைத் தவிர்க்க மதுரை ரோட்டில் கண்காணிப்பை தீவிரப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரியுள்ளனர்.பஸ் ஸ்டாண்ட் முதல் அண்ணாத்துரை சிலை சந்திப்பு வரை தேவையான இடங்களில் தரமான கேமராக்களை பொருத்தவும், நிறுவனங்கள் கேமராக்களை கூடுதலாக நிறுவவும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.