| ADDED : ஜூலை 16, 2024 11:57 PM
காரைக்குடி : காரைக்குடி பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் முறையாக வழங்கப்படாததால் பெண்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.காரைக்குடி தாலுகாவில் 143 ரேஷன் கடைகள் மூலம் 91 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார்டுதாரர்களுக்கு மானிய விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது.லோக்சபா தேர்தலையொட்டி டெண்டர் விடுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக ரேஷன் கடைகளுக்கு பருப்பு, பாமாயில் வந்து சேர்வதில் சிக்கல் ஏற்பட்டது. ரேஷன் கடைகளில் மே மாதம் பருப்பு, பாமாயில் கிடைக்காமல் மக்கள் திண்டாடினர்.புகாரின் பேரில் மே மற்றும் ஜூன் மாதத்திற்கான பருப்பு மற்றும் பாமாயிலை ஜூன் மாதம் பெற்றுக்கொள்ளலாம் என அரசு அறிவித்தது.ஆனால், தற்போது ஜூலை தொடங்கியும், காரைக்குடி பகுதியில் பல ரேஷன் கடைகளில் இந்த மாதத்திற்கான பருப்பு மற்றும் பாமாயில் வந்து சேரவில்லை. ஜூலையில் கிடைக்க வேண்டிய பருப்பு, பாமாயில் கிடைக்காமல் மக்கள்ரேஷன் கடைகளுக்கு அலைந்து வருகின்றனர். வட்ட வழங்கல் அலுவலர் பரிமளா கூறுகையில், மே மற்றும் ஜூன் மாதத்திற்கு வழங்க வேண்டிய பொருட்கள் வழங்கப்பட்டு விட்டது. தற்போது ஜூலை மாதத்திற்கான பருப்பு பாமாயில் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இரண்டு அல்லது மூன்று நாட்களில் ரேஷன் கடைகளுக்கு வந்து சேரும். ஒரு சில தினங்களில் பருப்பு பாமாயில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.