| ADDED : மார் 28, 2024 05:48 AM
கீழடி: கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் பத்தாம் கட்ட அகழாய்வு இனி தொடங்க வாய்ப்பில்லை என கருதப்படுகிறது. தமிழக தொல்லியல் துறை சார்பில் கீழடி, கொந்தகையில் அகழாய்வு பணி நடந்தது. ஒவ்வொரு வருடமும் ஜனவரியில் தொடங்கி செப்டம்பர் வரை அகழாய்வு பணிகள் நடைபெறும். கடந்தாண்டு அருங்காட்சியகம் திறப்பு விழா உள்ளிட்ட பணிகளில் தொல்லியல் துறையினர் ஈடுபட்டிருந்ததால் ஏப்ரலில் தொடங்கப்பட்டு செப்டம்பருடன் முடிவடைந்த நிலையில் 834 பொருட்களே கண்டறியப்பட்டன. எனவே 10ம் கட்ட அகழாய்வு திட்டமிட்டபடி ஜனவரியில் தொடங்கப்பட்டு செப்டம்பர் வரை விரிவாக நடைபெறும் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதியிருந்தனர்.ஆனால் தமிழக தொல்லியல் துறையினர் அகழாய்வு பணி தொடங்கப்படுவது குறித்து இதுவரை எந்த வித தகவலும் தெரிவிக்கவில்லை. லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19ல் நடைபெற உள்ள நிலையில் கீழடி அகழாய்வு தொடங்குவதற்கான எந்த வித சாத்திய கூறுகளும் இல்லை. இதுவரை தமிழக தொல்லியல் முறை மூலம் வருவாய்த்துறைக்கு நிலங்கள் கையகப்படுத்துவது குறித்து எந்த வித தகவலும் சொல்லவில்லை.மேலும் தேர்தல் பணியில் வருவாய்துறையினர் ஈடுபட்டுள்ளதால் அகழாய்வு பணிகளுக்கு நிலங்களை கையகப்படுத்தி தருவது இயலாத காரியம்.எனவே 10ம் கட்ட அகழாய்வு இந்தாண்டு நடைபெற வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது. கீழடி அகழாய்வில் சூதுபவளம், தந்த தாயக்கட்டை வரிவடிவ எழுத்துகள், கெண்டி மூக்கு பானை, வட்டப்பானை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டறியப்பட்டு கீழடி அருங்காட்சியகத்தில் 13 ஆயிரத்து 834 பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 10ம் கட்ட அகழாய்வு தொடங்குவதற்கு இடத்தை பார்வையிட மற்றும் ஆரம்ப கட்ட பணிகளுக்கு இன்று வரை தொல்லியல் துறை உயரதிகாரிகள், அமைச்சர் என யாருமே கீழடி வரவில்லை. எனவே 10ம் கட்ட அகழாய்வு இந்தாண்டு தொடங்கப்படாது என்றே தெரிகிறது. 10ம் கட்ட அகழாய்வு இதுவரை தொடங்கப்படாதது வரலாற்று ஆய்வாளர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.