சிவகங்கையில் பாதாள சாக்கடை மூடியால் விபத்து தொடர்கிறது
சிவகங்கை : சிவகங்கை நகராட்சி அலுவலகம் அருகே மேம்பால சர்வீஸ் ரோட்டில் சேதம் அடைந்த பாதாள சாக்கடை மூடியால் விபத்துக்கள் அடிக்கடி நடக்கிறது. சிவகங்கை நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தில் குழாய் பதித்தல், சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், வீடுகளுக்கு இணைப்பு என 3 கட்டங்களாக பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த பணி எந்த பகுதியிலும் முறையாக நடக்கவில்லை. பல இடங்களில் ரோடு அமைக்கப்பட்ட போது பாதாள சாக்கடை மூடி இருப்பதே தெரியாமல் தார் ஊற்றி ரோடு அமைக்கப்பட்டது. மழை காலங்களில் பாதாள சாக்கடை நீர் நிரம்பி எங்கேயாவது கழிவு நீர் வெளியேறினால் சாக்கடை மூடியை தேடுவதற்காக பல இடங்களில் ரோடு உடைக்கப்பட்டு சீரமைப்பு பணி நடக்கிறது. பணி முடித்து அந்த மூடியை ஒழுங்காக மூடாமல் அப்படியே விட்டு செல்கின்றனர். ரோட்டை விட உயரமாக மூடி இருக்கும் பகுதி மாறி விடுவதால் வாகனங்கள் செல்ல முடியாமல் அடிக்கடி விபத்துக்களும் நடக்கிறது. அனைத்து வீடுகளுக்கும் பாதாள சாக்கடை இணைப்பை ஒரே நேரத்தில் வழங்காமல் மக்கள் விரும்பிய நேரம் இணைப்பு கொடுக்கப்படுவதால் ஒவ்வொரு முறையும் இணைப்பு கொடுப்பதற்காக ரோடு உடைக்கப்பட்டு இணைப்பு கொடுத்த நிலையில் ரோட்டை சீரமைக்காமல் அப்படியே விட்டு விடுகின்றனர். மேலும் குடிநீர் இணைப்பு கொடுக்கும் போதும் இது போன்று ரோட்டை சேதப்படுத்தி விட்டு செல்கின்றனர். இது போன்ற காரணங்களால் நகராட்சியில் பல தெருக்கள் குண்டும் குழியுமாக மாறி ரோடு போக்குவரத்திற்கு பயனற்றதாகி விட்டது. நகராட்சி அலுவலகம் அருகே மேம்பால சர்வீஸ் ரோட்டில் பாதாள சாக்கடை மூடி முழுவதும் சேதமடைந்துள்ளது. இந்த ரோடு வழியாகத்தான் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து ஆயுதப்படை குடியிருப்பு, வந்தவாசி, ரோஸ் நகர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் வாகனங்களில் செல்கின்றனர். விபத்து ஏற்படும் முன் இந்த பள்ளத்தை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.